காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் ஜயந்தி விழா
சென்னை, ஜூன் 3 -
மஹா பெரியவர் என்று பக்தர்களால் போற்றி அழைக்கப்பட்டும் காஞ்சி மஹாஸ்வாமிகளின் 130 வது ஜயந்தி விழா, அவரது ஜென்ம நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் இன்று காஞ்சி சங்கர மடம் உட்பட நாடெங்கிலும், ஏன் அயல்நாடுகளிலும் கூட, அவரது ஆத்மார்த்த பக்தர்களால் அதிவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், மேற்கு சைதாப்பேட்டை, வி.ஜி.பி. சாலையில், பார்சன் நகர் வளாகத்தில் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத்சங்கம் டிரஸ்ட் சார்பில் இன்று சங்க அலுவலக கட்டிடத்தில் சிறப்பாக நடந்தேறியது.
காலை 6 மணி அளவில் கோ பூஜையுடன் விழா துவங்கப்பட்டது. தொடர்ந்து ஹோமங்கள் வரிசையில் கணபதி, ஆவஹந்தி, ஆயுஷ்ய, நட்சத்திர, துர்கா ஸூக்த, ருத்ர ஹோமங்களும், பூஜைகள் வரிசையில் வடுக, கன்யா, சுமங்கலி, தம்பதி பூஜைகளும், பாராயணங்கள் வரிசையில் ஏகாதச ருத்ர பாராயணம், தேவாரம், திருவாசகம், தோடகாஷ்ட பாராயணங்களும் நடத்தப்பட்டது. வந்திருந்த பக்தர்கள் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் நாம ஜபங்கள் செய்தனர்.
விழாவின் நிறைவாக மஹாஸ்வாமிகள் உத்ஸவ திருமேனிக்கு பலவித திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும், ஏகாதசருத்ர பாராயணத்துடன் கலசத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட தீர்த்தத்தை கொண்டும், மஹாஸ்வாமிகள் மற்றும் காமாக்ஷி அம்மன் திருவுருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசுகளைக் கொண்டு சொர்ணாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
அலங்காரத்திற்குப் பிறகு காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் 68 குருமார்கள் பேரைக் கொண்ட நாமவளிகளுடனும், மஹா பெரியவா அஷ்டோத்ர அர்ச்சனை நடந்து, மகாதீபாரதனை நடந்தேறியது.
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு தாம்பூல பையில் ஸ்தோத்திர பாராயண புத்தகம், ஹோம ரட்சை பிரசாதங்களும் வழங்கப்பட்டது. அபிஷேகம் செய்யப்பட்ட வெள்ளிக் காசுகளை குரு காணிக்கை செலுத்தி சிலர் பெற்றுக் கொண்டனர். ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு கொரியரில் அனுப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் பசியாற சித்ரான்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஹோமங்கள், பூஜைகளை மேற்கு மாம்பலம் ஸ்ரீ பாலாஜி சாஸ்திரிகள் குழுவினரும் விழா ஏற்பாடுகளை ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத்சங்கம் டிரஸ்ட் அங்கத்தினர்களும் வெகு சிறப்பாகச் செய்திருந்தனர்.
இந்த 130வது அனுஷ மஹா ஜெயந்தி உத்சவத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்வில் எல்லா நலன்களை பெறுவதற்கும் தினசரி ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் என்கின்ற நாம ஜபத்தை தொடர்ந்து செய்வதற்கும், ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹத்தையும் பரிபூர்ண ஆசிகளையும் வேண்டுகின்றோம்.
இன்று மாலை நமது மஹாஸ்வாமிகள் உத்ஸவ மூர்த்தி வளசரவாக்கத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டு அங்கு அலங்காரங்கள் செய்தபின் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க ஏற்பாடு ஆகியுள்ளது.
அடுத்த ஆனி மாத அனுஷ பூஜை நாள் ஜூலை 1 சனிக்கிழமையன்று அமைகின்றது. இவ்வாறு டிரஸ்ட் நிர்வாகி திரு. இராமன் வெங்கடா அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments
Thank you for your comments