செய்தியாளரின் செல்போனை பிடுங்கி வீசிய திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் அத்துமீறிய செயல் -NJU தலைவர் கா.குமார் கண்டனம்
செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கி செய்தியாளரின் செல்போனை பிடுங்கி வீசிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள தனது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த இரும்புலி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதை கண்டித்து, கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த தகவலை அறிந்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரை அசிங்கமான வார்த்தைகளாலும், தரக்குறைவாகவும் பேசி, தாக்குதல் நடத்தி, செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளரின் செல்போனை பிடுங்கி இரும்புலி ஊராட்சி ஒன்றிய தலைவர் சூரியகலாவின் கணவர் மன்மதன் வீசி உடைத்துள்ளார்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாம்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட இரும்புலி ஊராட்சி ஒன்றிய தலைவர் சூரியகலாவின்(திமுக) கணவர் மன்மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஊராட்சி ஒன்றிய தலைவர் சூரியகலாவின் கணவர் மன்மதன் செய்தியாளரை மிரட்டி, அவரது உடைமைகளை உடைத்து அதிகார வர்கத்தின் அத்துமீறல் செயலை செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளில் உள்ள பெண்களின் கணவர்கள், உறவினர்களின் தலையீடு இருக்கக்கூடாது. நிர்வாகத்தில் கணவர்களின் தலையீடு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
செய்தியாளர்களை மிரட்டுவதும், தாக்குதல் நடத்தும் இந்த செயல் சமூகத்தின் அவலநிலையையே காட்டுகின்றன. இதுவும் மிகவும் கண்டனத்துக்கு உரிய செயலாகும்.
நேரம் காலம் பாராமால் அயராது உழைக்கும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகம் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் செயல்பட்டால்தான் மக்களுக்கு உண்மைகள் சென்று சேரும்.
அரசியல் மற்றும் மதவாத சக்திகள், பத்திரிகையாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறார்கள். அதன் விளைவு ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறை தனது சுதந்திரத்துக்காகப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு செய்தியாளர்களை தாக்குபவர்கள் மீது உரிய வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதற்கு உரிய தீர்வு கிடைக்கும்.
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மன்மதன் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கையை காவல் துறை மேற்கொள்ளவேண்டும்.
அரசியல் பின்புலம் செயல்பட்டால் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் செய்தியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்களது உரிமைக்காக போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம்.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments
Thank you for your comments