டாப்செட்கோ மூலம் கடன் வழங்கும் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் கடன் வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.கா.காஜா முகைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் தொடர்பாக அரசு அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் இன்று (26.05.2023) தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.கா.காஜா முகைதீன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தனிநபர் கடன், சுய உதவிக்குழு கடன், கறவை மாட்டுக் கடன் மற்றும் நீர்ப்பாசன கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன் திட்டங்கள் குறித்தும் பயனாளிகளின் எண்ணிக்கை, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் உதவித்தொகை, மொத்த நிதி ஒதுக்கீடு மற்றும் கடந்த ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எய்தப்பட்ட சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டு அறிந்து ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில் டாப்செட்கோ தலைவர் அவர்கள் இரண்டு பயனாளிகளுக்கு தலா ரூ.6,000/- மதிப்புள்ள விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கினார்.
டாப்செட்கோ தலைவர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாப்செட்கோ கழகத்தின் மூலம் பல்வேறு கடன் உதவி பெற்ற பயனாளிகளின் தொழில் புரியும் இடங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு திட்டங்கள் குறித்தும், திட்டங்களின் பயன்பாடுகள் குறித்தும் பயனாளிகளிடம் நேரடியாக கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் தமிழ்நாடு அரசின் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்ற பயனாளிகள் இதனை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் எனவும் பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் திரு.மு.முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி. கஸ்தூரி மற்றும் கூட்டுறவு வங்கிகள் / சங்கங்களின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments
Thank you for your comments