எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளை அதிமுகவின் எழுச்சி நாளாக கொண்டாடுகிறோம்... காஞ்சிபுரத்தில் வைகைச்செல்வன் பேட்டி
காஞ்சிபுரம், மே 12-
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளை எழுச்சி நாளாக கொண்டாடி வருவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், இலக்கிய அணியின் மாநில செயலாளருமான வைகைச்செல்வன் காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் 69 வது பிறந்த நாளையொட்டி அக்கட்சி சார்பில் அவர் நலமுடன் நீடுழி வாழ வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழாவில் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஏற்பாட்டின் பேரில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் தங்கத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கட்சியின் செய்தித் தொடர்பாளரும், இலக்கிய அணியின் செயலாளருமான வைகைச் செல்வன் தேரை வடம்பிடித்து இழுத்து தொடக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு கட்சியின் சார்பில் அன்னதானமும் நடைபெற்றது.
முன்னாள் எம்பி காஞ்சி. பன்னீர் செல்வம், ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.சோமசுந்தரம் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கத்தேரைவடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்ட நிறைவில் வைகைச் செல்வன் கூறியது..
எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளை அதிமுகவினர் எழுச்சி நாளாக கொண்டாடுகிறோம். ஏழைகளின், விவசாயிகளின் முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி திகழ்ந்தார்.அவரது தலைமையில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி அமைக்கும்.வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும்,பேரவைத் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.எம்ஜிஆரும்,ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இயக்கம் அதிமுக. இதை அழிக்க நினைப்பவர்கள் அழிந்தே போய் விடுவார்கள்.
அரசியலிலும்,பொருளாதாரத்திலும் பின்புலமே இல்லாதவர்களும் மிகப்பெரிய பதவிக்கு அதிமுகவில் மட்டுமே வர முடியும்.அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் வைகைச் செல்வன் தெரிவித்தார்.




No comments
Thank you for your comments