Breaking News

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்,  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையம் சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பயிற்சி வகுப்பினை  இன்று (29.05.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு அரசு “நான் முதல்வன்” என்ற சிறப்பு திட்டம் மூலம்,  பொறியியல் கல்லூரி மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உரிய வேலை வாய்ப்பினை பெறும் நோக்கில் தொழில் திறன் பயிற்சிகளை கல்லூரிகள் தோறும் நடத்தி வருகிறது. 

நான் முதல்வன் திட்டத்தின் அடுத்த கட்டமாக மத்திய அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த பயிற்சிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் கட்டமாக 150 நபர்களுக்கு வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட என் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர், ஒரு அரசு கல்லூரி முதல்வர்,  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் உள்ளிட்ட உறுப்பினர்களை கொண்ட குழு அமைத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சியினை பெற முதல் 150 தகுதியான நபர்கள் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தெரிவு செய்யப்பட்டு சிறந்த பயிற்றுவிப்பு வல்லுநர்களை கொண்டு இன்று முதல் துவக்கப்பட்டு 100 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சியானது இரயில்வே தேர்வுகள் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள், வங்கி பணித்தேர்வுகள் (RRB, SSC, IBPS)  ஆகியவற்றை திறன்பட எதிர்கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சி பெறும் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்த மொத்தம் 446  நபர்களில் முதல்கட்டமாக 150 நபர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தால் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். 

தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 45 இடங்களில்  6750  நபர்களுக்கு இப்பயிற்சி இன்று முதல் 100 நாட்களுக்கு வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இத்துவக்க விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் திரு.ஆர்.அருணகிரி, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் திருமதி.ச.காயத்திரி, அரசு அலுவலர்கள் மற்றும் பயிற்சி வகுப்பு மாணவ, மாணவியர்கள் கலந்துக் கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments