Breaking News

திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் 272 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - டி.ஆர்.பாலு பேச்சு

காஞ்சிபுரம், மே.9:

திமுக ஆட்சி நிறைவு பெற்றுள்ள இரண்டே ஆண்டுகளில் 272 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேசினார்.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காந்தி சாலையில் பெரியார் தூண் அருகில் நடைபெற்றது.மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ வுமான க.சுந்தர் தலைமை வகித்தார்.எம்பி க.செல்வம், எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவின் போது கண் சிகிச்சை முகாமில் கண்ணாடி வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கண்ணாடிகளை வழங்கி டி.ஆர்.பாலு பேசியதாவது...

திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில் 30 ஆயிரம் பள்ளிகளில் 18 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கபபட்டுள்ளது.ரூ.2.76 லட்சம் கோடி மதிப்பில் இரு ஆண்டுகளில் 272 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடந்துள்ளன.இதன் மூலம் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.

ரூ.3185 கோடி மதிப்பில் 58 லட்சம் பேருக்கு மருத்துவக்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.அரசுப்பணிகளில் பெண்களுக்கு 40 சதவிகித ஒதுக்கீடு வழங்கி இருக்கிறோம்.எத்தனை முறை போனாலும் இலவசமாக செல்லும் வகையில் பெண்களுக்கு இலவசமாக பேருந்துகளில் செல்லும் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவியர் உயர் கல்வி படிப்புக்காக மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்,அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் போன்ற பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் சமூக நலத் திட்டங்களுக்காக ரூ.4466 கோடியும்,மகளிர் நலத்திட்டங்களுக்காக ரூ.18,661 கோடியும், கல்விக்காக ரூ.47ஆயிரம் கோடியும் ஒதுக்கியிருக்கிறது திமுக அரசு. 

அம்மா உணவகத்தை அண்ணா உணவகம் என்று பெயர் மாற்றம் செய்யுமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்படுவோம் என அம்மா உணவகம் என்றே இருக்கட்டும் என்று சொன்ன உயர்ந்த மனித நேயம் மிக்கவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் டி.ஆர்.பாலு பேசினார்.

இக்கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்கேபி சீனிவாசன், எஸ்.சிகாமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அ.யுவராஜ் உட்பட கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments