Breaking News

கோவிட் -19 பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு மானியத்துடன் கடனுதவி

கோவிட்-19  பரவலால் வேலையிழந்து  நாடு  திரும்பியோருக்கு  மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. 


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி  தெரிவித்துள்ளதாவது, 

கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலால் வெளிநாட்டில்  வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்னும் திட்டத்தினை விரைந்து செயல்படுத்தி வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி புரிந்து கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்து கடனுதவி பெற்றுப் பயன் பெறலாம்.

அவர்கள் கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலினால்  01.01.2020 அன்று  அல்லது அதற்குப் பிந்தைய  நாட்களில் தமிழ்நாடு திரும்பியிருக்க வேண்டும்.  குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 க்கு மேலாகவும், 55க்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

வணிக மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 இலட்சமாகவும் உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு ரூ.15 இலட்சமாகவும் இருக்கும். பயனாளர் தம் பங்காக, பொதுப் பிரிவுப் பயனாளர்கள் எனில் திட்டத் தொகையில் 10% மற்றும் பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் எனில் 5 % செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். அரசு, திட்டத் தொகையில் 25% அதிகபட்சம் ரூ.2.5 இலட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு  பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும்.

கடன் வழங்கப்பட்ட 6 மாதங்கள் கழித்து 5 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தப்படவேண்டும். இத்திட்டம் மாவட்டத் தொழில் மையத்தின் வாயிலாகச் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்டத் தொழில் மையங்களில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்ய வேண்டும். எனவே, வெளிநாடுகளிலிருந்து கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் கொண்டோர் தம் வாழ்வாதாரத்துக்கான தொழில் தொடங்க இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகப் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தினை நேரடியாகவோ, 044-27238837, 27238551, 27236686, ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்

No comments

Thank you for your comments