Breaking News

காஞ்சிபுரத்தில் சிவனடியார்கள் உழவாரப்பணி விழிப்புணர்வு ஊர்வலம்

காஞ்சிபுரம், ஏப்.23 :

சென்னை அம்பத்தூரை சேர்ந்த இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில் ஏராளமான சிவனடியார்கள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக வந்தனர்.


காஞ்சிபுரம் ஓணகாந்தேசுவரர் திருக்கோயில் தெப்பக்குளத்தினை சென்னை அம்பத்தூரை சேர்ந்த இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் உழவாரப்பணி செய்து சுத்தம் செய்தனர்.


இதனைத் தொடர்ந்து மாலையில் அம்மன்றத்தின் தலைவர் ச.கணேசன் தலைமையில் சிவனடியார்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலிலிருந்து புறப்பட்டு சங்கரமடம்,குமரகோட்டம் முருகன் கோயில் வழியாக கச்சபேசுவரர் கோயிலில் வந்து ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.

ஊர்வலத்தில் வந்த சிவனடியார்கள் பலரும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல்,பிளாஸ்டிக்கை ஒழித்தல்,துணிப்பையை பயன்படுத்துதல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறும்,சிவ வாத்தியங்கள் இசைத்தவாறும் வந்தனர்.சிவலிங்கம் போன்று மரத்தால் வடிவமைக்கப்பட்ட சிலையையும் சிவனடியார்கள் ஊர்வத்தில் எடுத்து வந்தனர்.

காஞ்சிபுரம் ஓலகாந்தேசுவரர் திருக்கோயில் தெப்பக்குளம் 249 வது உழவாரப் பணியாகவும்,அடுத்ததாக வடபழனி முருகர் கோயில் தெப்பக்குளம் 250 வது உழவாரப்பணியாக செய்ய இருப்பதாகவும் மன்றத்தின் தலைவர் ச.கணேசன் தெரிவித்தார்.

படவிளக்கம்}காஞ்சிபுரம் ராஜவீதிகளில் வீதியுலா வந்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தின் சிவனடியார்கள்

No comments

Thank you for your comments