Breaking News

காயாரோகணேஸ்வரர் கோயிலில் வெள்ளை யானை வாகனத்தில் காட்சியளித்த உற்சவர் குருபகவான்

 காஞ்சிபுரம், ஏப்.23- 

காஞ்சிபுரத்திலும் அதனை சுற்றியுள்ள கோயில்களிலும் குருப்பெயர்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.


காஞ்சிபுரம் காயாரோகணேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி வெள்ளை யானை வாகனத்தில் காட்சியளித்த உற்சவர் குருபகவான்

குருபகவான் தனது சொந்த வீடான மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியானதையொட்டி குருப்பெயர்ச்சி விழா காஞ்சிபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கோயில்களிலும் சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள குருபகவான் கோயில் எனப்படும் கமலாம்பிகை சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

குருபகவான் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், உற்சவர் குருபகவான் வெள்ளையானை வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் கமலாம்பிகை சமேத காயாரோகணேஸ்வரர் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமையில் திருக்கோயில் பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர், பள்ளியறை மற்றும் உச்சிக்கால வழிபாட்டுச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

விழாவில் கோயில் செயல் அலுவலர்கள் ஜெ.ப.பூவழகி, அமுதா மற்றும் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் வ.ஜெகன்னாதன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

திம்மராஜம்பேட்டை ராமலிங்கேசுவரர் கோயிலில்
சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவான்

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டையில் உள்ள வடக்கு ராமேசுவரம் என அழைக்கப்படும் பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேசுவரர் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. குருபகவான் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் தாரை சமேத குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடந்தன. கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் மற்றும் தட்சிணா மூர்த்தி ஆலயத்திலும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

No comments

Thank you for your comments