அஞ்சலகங்களில் மகளிர் மதிப்புத் திட்டம் - அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
காஞ்சிபுரம், ஏப்.19:
அஞ்சலகங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் மதிப்புத் திட்டம் என்ற சிறப்பு சேமிப்பு திட்டமானது இம்மாதம் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக காஞ்சிபுரம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் க.பாபு புதன்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது :
பெண்களுக்காக மத்திய அரசால் சிறப்பு சேமிப்பு திட்டமான மகளிர் மதிப்புத் திட்டம் அஞ்சல் துறையின் மூலம் இம்மாதம் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.2லட்சம் வரை 31.3.2025 வரை முதலீடு செய்யலாம். பெண்கள், பெண் குழந்தைகள் பெயரில் தனி நபர் கணக்கு தொடங்கி 7.5 சதவிகித வட்டி விகிதமாக ரூ.2லட்சம் முதலீட்டுக்கு 2 ஆண்டுகள் கழித்து ரூ.32.044 வட்டியாக வழங்கப்படுகிறது.
ஒரு நபரின் பெயரில் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஒவ்வொரு புதிய கணக்கிற்கும் 3 மாத கால இடைவெளி அவசியம். இத்திட்டத்தில் உள்ள ஒரு நபரின் ஒட்டு மொத்த திட்ட முதலீடு ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கணக்கு ஆரம்பித்த ஒரு ஆண்டுக்கு பின்னர் கட்டியுள்ள தொகையில் 40 சதவகிதத்தை எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. கணக்கு தொடங்கிய 6 மாதங்களுக்குப் பிறகு நிபந்தனைக்கு உட்பட்ட வட்டி விகிதங்களுடன் முன்கூட்டியே கணக்கை முடித்துக் கொள்ளும் வசதிம் உள்ளது.
எனவே பெண்கள் மகளிர் மதிப்புத்திட்ட கணக்கினை அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெறுமாறும் க.பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments