அரசு பஸ்ஸில் பெண் போலீஸிடம் சில்மிஷம் முன்னாள் ராணுவ வீரர் கைது
நீலகிரி :
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் 30 வயது பெண் போலீஸ். இவர் நேற்று பணி நிமித்தமாக கோவைக்கு சென்றார். பின்னர் மீண்டும் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்து, அங்கிருந்து குன்னூருக்கு பஸ்சில் பயணித்தார். அதே பஸ்சில் கோத்தகிரி அஜூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான தர்மன் (வயது 56) என்பவரும் பயணித்தார்.
இவர் பெண் போலீஸ் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தார். பஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு குன்னூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரரான தர்மன், தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் போலீசிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான பெண் போலீஸ் சத்தம் போட்டுள்ளார். இருப்பினும்
அந்த நபர், தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பெண் போலீஸ் இருக்கையை விட்டு எழுந்து, தர்மனை சத்தம் போட்டார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முன்னாள் ராணுவ வீரர் ஆத்திரத்தில்
பெண் போலீசை தாக்கினார். இதை பார்த்த சக பயணிகள் என்னவென்று விசாரித்தபோது, பெண் காவலர் நடந்தவற்றை கூறினார்.
இதையடுத்து சக பயணிகள் அந்த நபரிடம் இது தொடர்பாக விசாரித்தனர். அப்போது, அவர் தனக்கு எஸ்.பி. மற்றும் டி.எஸ்பி.யை தெரியும். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்து கொண்டே இருந்தார். இதற்கிடையே பஸ் காட்டேரி வந்ததும்,
பஸ் டிரைவர், தர்மனை கீழே இறக்கி விட்டார். இருப்பினும் அவரை போலீசில் பிடித்து கொடுக்க நினைத்த பெண் காவலர் பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு விடுமாறு கூறியுள்ளார். ஆனால் டிரைவர், தர்மனை இறக்கிவிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
இதனால் பெண் காவலரும் பஸ்சை விட்டு கீழே இறங்கி அந்த நபரை பின் தொடர்ந்தார். அப்போது தர்மன் மற்றொரு பஸ்சில் ஏறவே, பெண் காவலரும் அதே பஸ்சில் ஏறினார். பின்னர் பஸ் டிரைவரிடம் தகவல்களை கூறி குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் பஸ்சை நிறுத்த கூறினார்.
அவரும் அதேபோல பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து பெண் போலீஸ், சக போலீஸ்காரரை தொடர்பு கொண்டு, நடந்தவற்றை தெரிவித்து
உதவிக்கு அழைத்தார். அவர் வந்தவுடன் தர்மனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பெண் போலீஸ் தர்மன் மீது புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தர்மன் பெண் போலீசிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் தர்மனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

No comments
Thank you for your comments