Breaking News

பரந்தூர் விமான நிலைய போராட்ட களத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட நேரில் வரவேண்டும் - விசிக கோரிக்கை

பரந்தூர் விமான நிலைய போராட்ட களத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட நேரில் வரவேண்டும் என 250 நாள் போரட்டகளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் கிராமம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று 250வது நாளாக ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு மாற்றாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன.

இதற்காக சுமார் 4500 ஏக்கர் விளை நிலங்கள், நீர்நிலைகள் குடியிருப்புகள் பாசன கால்வாய் உள்ளிட்டவைகள் கையகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அன்று முதல் ஏகணாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


நாள்தோறும் இரவு நேரங்களில் மத்திய,மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஒருபோதும் விவசாய நிலங்களை தரமாட்டோம் குடியிருப்புகளை விட்டு வெளியேற மாட்டோம் எனக் கூறி பல்வேறு வகைகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுவரை இரண்டு முறை தமிழக அமைச்சர்கள் தலைமையிலான குழுவிடம் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு கிராம கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்திய தோல்வி அடைந்து திட்டம் கைவிடப்படாமல் அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தமிழக கட்சிகள் என அனைவரும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவ்வப்போது கண்டன ஆர்ப்பாட்ட கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.

மேலும் பல்வேறு சமூக ஆர்வலர் குழுக்களும், பிரபல சமூக ஆர்வலருமான மேத்தா பட்கர் போராட்டக் களத்தில் போராடிவரும் மக்களை நேரடியாக சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிராமத்திற்கு புதிய கிராம நிர்வாக அலுவலர்கள் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்த போது இதுகுறித்து விமான நிலைய திட்ட குழுவிடம் அனுமதி பெற வேண்டும் இதற்கான பதில்கள் பிறகு தரப்படும் என அமைச்சர் பதில் அளித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டும் கிராம பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 250 வது நாளை எட்டியதையொட்டி ஏகனாபுரம் கிராமத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு கலந்து கொண்டு அரசு திட்டத்தை கைவிட வேண்டும் என கோரி முழக்கங்கள் எழுப்பி பொதுமக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த வண்ணியரசு தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்தாலும் பொதுமக்களின் பக்கமே எப்போதும் தங்கள் கட்சி இருக்கும் என்றும், இதேபோல் தங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விமான நிலையம் வேண்டாம் எனக் கூறும் மக்களுக்கு ஆதரவாக உள்ளோம்.

இந்நிலையில் திராவிட மாடல் ஆட்சி, மக்களுக்கான ஆட்சி என தெரிவித்து வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இங்கு நடைபெறும் போராட்ட களம் மற்றும் கிராமங்களை நேரில் பார்வையிட்டு திட்டத்தை கைவிட முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து கூட்டணியில் உள்ள கட்சிகள் முதல்வரிடம் முறையிடுமா என கேட்டபோது, இது குறித்து ஆலோசிக்கப்பட்டு சட்டமன்றத்தில் தான் பேசுவேன் என்றும் தெரிவித்தார்.

250 ஆவது நாள் போராட்டத்தையொட்டி அப்பகுதியை சுற்றிலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது

No comments

Thank you for your comments