Breaking News

பெரியாரா, மோடியா? - பிரதமரின் சென்னை நிகழ்வில் திமுக, பாஜகவினர் வாழ்க கோஷத்தால் சலசலப்பு

சென்னை: 

சென்னை - பல்லாவரத்தில் பிரதமர் மோடியின் நிகழ்வில் ‘பெரியார் வாழ்க’ என்று திமுக தொண்டர்களும், ‘மோடி வாழ்க’ என்று பாஜக தொண்டர்களும் கோஷங்களை எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.


சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து சென்னை - கோவை இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன்பிறகு, சென்னை - மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு கொண்டாட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னை - பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

மதுரை நகரில் 7.3 கி.மீ. நீள மேல்மட்டச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ன் 24.4 கி.மீ. நீள 4 வழிச்சாலை ஆகியவற்றை அவர் தொடங்கிவைக்கிறார். மேலும். தேசிய நெடுஞ்சாலை 747-ல் சாலைத் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு, மோடி வருவதற்கு முன்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மேடைக்கு அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது திமுக தொண்டர்கள் ‘பெரியார் வாழ்க’ என்று கோஷங்களை எழுப்பினார். இதற்கு பதிலடியாக பாஜக தொண்டர்கள் ‘மோடி வாழ்க’ என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


No comments

Thank you for your comments