Breaking News

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து! - உரிய நிவாரணம் வழங்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் உள்ள குருவிமலை வசந்த் நகர் பகுதியில் அமைந்துள்ள நரேஸ் பயர்ஸ் என்கிற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.  இன்று இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 9 பேர் மரணமடைந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த வெடிவிபத்து நிகழ்ந்தபோது அந்த ஆலையை சுற்றியுள்ள 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலை செயல்பட்டு வந்த கட்டிடங்கள் முழுவதும் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. இங்கு வேலை செய்து வந்தவர்கள் அனைவரும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் நரேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் பலியான தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

இந்த பட்டாசு ஆலையில் எந்தவிதமான பாதுகாப்பு விதிமுறைகளும் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. ஊழியர்களுக்கு எந்தவிதமான விபத்து காப்பீடும் செய்யப்பட்டதாகவும் தெரியவில்லை.  மாவட்ட அளவில் இருக்கக் கூடிய தொழிற்சாலை ஆய்வாளர்கள் கண்டும் காணாமல் இருந்ததன் மூலம் இந்த விபத்து ஏற்பட்டது விசாரணையின் மூலம் தெரியவந்தால் சம்பந்தபட்ட அதிகாரிகளை கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

உயிரிழந்த அப்பாவி தொழிலாளர் குடும்பங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு / நிவாரணத் தொகையும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட வேண்டும். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். கை, கால் இழந்து மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் அபாயகரமான சூழலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க கூடியவர்கள் உள்ளிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் உயரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே, தமிழகத்தில் இதுபோன்ற தொடர் வெடி விபத்துகளும் அதை ஒட்டிய உயிர்ப்பலிகளும் நடைபெற்று வரக்கூடிய சூழலில், அரசு அனுமதி பெறாமல், பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காமல் நடைபெறும் அனைத்து பட்டாசு ஆலைகளை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதையும், பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படுகிறதா என்பதை தொழிற்சாலை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பதையும் அரசு உறுதி செய்திட வேண்டும். இனிமேல் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாவண்ணம்  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

No comments

Thank you for your comments