Breaking News

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 8 பேர் பலி

காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.



காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறிய ரக மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. 



நண்பகல் 12 மணியளவில் குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டிருந்த பட்டாசின் மூலப்பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ வேகமாக பரவி பட்டாசு ஆலை குடோன் பகுதிக்கும் பரவியது. அப்போது, அங்கு 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். பட்டாசு குடோனில் பலத்த சத்தத்துடன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து, 2 தீயணைப்பு வாகனத்துடன் வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு படுகாயமடைந்த 7 பெண்கள் உள்ளிட்ட பலர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். 14 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசு கடை உரிமையாளர் நரேந்திரனை போலீசார் கைது செய்தனர்.


இந்த விபத்து குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments