என்ஜேயூ தலைவர் டாக்டர் கா.குமார் செய்தித்துறை அமைச்சரிடம் கோரிக்கை
சென்னை :
செய்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் செய்தி மக்கள் தொடர்புதுறையின் மானிய கோரிக்கையின் போது நிறைவேற்றி தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு செய்தியாளர்களின் வாழ்வு வளம்பெற செய்ய வேண்டும் என்று ஓய்வூதியம் உயர்வு, பாதுகாப்பு, கல்வி உதவி, தாலுகா செய்திதுறையினருக்கு அரசு நல திட்டங்கள் உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றிய கோரிக்கை மனுவை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு மு. பெ. சாமிநாதன் அவர்களை மற்றும் செய்தித்துறை இயக்குநரையும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் 27-03-2023 அன்று சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினார்.
உடன் மாநில இணைச்செயலாளர் ஜி.கே.ராஜா, பொதுக்குழு தலைவர் சி.கே.ராஜன், மாநில துணைச்செயலாளர் ஜெ.பிரேம்குமார், மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.கருணாகரன், மாநில ஆலோசகர் யூசப், மேற்கு மண்டலத் தலைவர் ஈ.தனஞ்செயன், மண்டல இணைச் செயலாளர் என்.முருகானந்தம் மற்றும் ஸ்ரீராமுலு உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து வழங்கினர். அப்போது மரியாதை நிமித்தமாக நினைவு பரிசையும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வழங்கினர்.
செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைவர் டாக்டர் கா.குமாரிடம் கோரிக்கை மனுவை பரிசீலிப்பதாக நம்பிக்கை அளித்தார். மேலும் செய்திதுறையில் நிலவும் நிறை குறைகள், சமூகத்தில் நிலவும் சவால்கள் குறித்து அமைச்சர் முன்னதாக அலசி ஆராய்துள்ளார். அதுகுறித்தும், செய்தி துறை சார்ந்தவர்களுக்கு ஏற்படும் இடர்கள் குறித்தும் நே.ஜ.யூ., தலைவர் டாக்டர் கா.குமார் மற்றும் நிர்வாகிகளிடம் உரையாடினார்.
செய்திதுறை அமைச்சர் உரையாடலை கண்டு நிர்வாகிகள் மிகவும் வியப்படைந்தனர். மேலும் தலைவர் டாக்டர் கா.குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.
செய்தித்துறை அமைச்சரிடம் அளித்த தீர்மானம்-கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
⦿ 1-செய்தி சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு
செய்திதுறையை சேர்ந்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து தாக்கப்படுவதும், செய்தி சுதந்திரத்தை பறிக்கும் விதமாக பொய்வழக்கு புனைவதும் தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்றுவருகிறது. ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது..! இச்செயல் ஜனநாயக படுகொலையே..! செய்தியாளர்களை தாக்குவது நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகும். எனவே செய்தியாளர்களுக்கு செய்தி சுதந்திரம் பாதுக்காப்பு சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி தர வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.
⦿ 2-ஓய்வூதியம்
தற்போது விலைவாசி உயர்வால் மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் ஓய்வூதியம் ரூ.10,000/- போதுமானதாக இல்லாமல் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் வறுமையின் பிடியில் தவிக்கிறார்கள். எனவே இன்றைய பொருளாதார சூழலையும், பத்திரிகையாளர் நலனையும் கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 10,000/- ரூபாயிலிருந்து 15,000/- ரூபாயாகவும், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 5,000/- ரூபாயிலிருந்து 8,000/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி நல்வாழ்விற்கு வழிவகுக்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.
மேலும், இன்றைய பொருளாதார சூழலில் குறைந்தபட்ச ஆண்டு தேவை ரூ.5 லட்சம் வருமானம் போதுமானதாக இல்லை. பற்றாக்குறையாகதான் உள்ளது. இந்த சூழ்நிலையில் எதிர்காலதேவையாக எந்தவித சேமிப்பும் செய்யமுடியாமல் கடன் சுமையில்தான் வாழ்வாதாரங்கள் உள்ளன. எனவே, ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்கொடையின் உச்சவரம்பானது, ஆண்டு வருமானத்திற்கான உச்சவரம்பானது மூன்று இலட்சம் ரூபாயிலிருந்து ஆறு இலட்சம் ரூபாயாக உயர்த்தி அவர்களது எதிர்கால வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.
⦿ 3-பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி
பத்திரிகைத் துறையில் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழை திருத்துபவர் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதனை மும்மடங்காக உயர்த்தி வழங்கி அவர்களது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.
⦿ 4-நல நிதியம்
பத்திரிகையாளர் நலநிதிக்கென நிரந்தர நிதியாக ‘தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்’ ஒரு கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டு, இந்த தொகையின் மூலம் கிடைக்கப் பெறும் வட்டித் தொகையிலிருந்து பத்திரிகையாளர்கள் பணிக்காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் நேரத்தில், அவர்களுக்கு மருத்துவ நிதியுதவி வழங்கிட நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சத் தொகை ரூபாய் இரண்டு இலட்சத்திலிருந்து மூன்று இலட்சமாக உயர்த்தி வழங்க ஆவணம் செய்யுமாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.
⦿ 5-அரசு வாடகைக் குடியிருப்பு வசதி
பத்திரிகையாளர்களுக்கு அரசு வாடகைக் குடியிருப்பு வசதி, பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் சிறப்பு அடிப்படையில் அரசு வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்திட்டம் செயத்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முறையாக சென்றடையவில்லை. இத்திட்டம் செய்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முறையாகச் சென்றடைய வழிமுறைகளை வகுத்து முறைப்படுத்த வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.
⦿ 6-வீட்டுமனை வசதி
இத்திட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மாவட்ட அளவில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனை ஒழுங்குபடுத்த பத்திரிகையாளர் நிர்வாகத்தின் பரிந்துரையின் மூப்பு (Seniority Based) அடிப்படையிலே ஒதுக்கீடு செய்ய ஆவண செய்யவேண்டும். மேலும் ஒதுக்கீடு செய்ய குழு அமைத்து அக்குழுவில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் பதிவு செய்துள்ள நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக ஒருவரை குழுவில் இணைக்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் உண்மையான பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் சென்றடையும். இன்றளவில் பல மாவட்டங்களில் சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்காமல் நிலைவையில் உள்ளன. விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சலுகை விலையை தவிர்த்து, இலவச வீட்டுமனை வழங்குமாறு பணிவன்புடன் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.
⦿ 7-கல்வி உதவி
செய்தித் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். நமது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, தெலங்கான, புதுச்சேரி மாநிலங்களில் பல்வேறு கல்வி சலுகைகள், கட்டணமில்லா கல்வி போன்றவற்றை வழங்கி வருகின்றன. கல்வியில் சிறந்து விளங்கும் நமது மாநிலத்தில் செய்தித்துறையைச் சேர்ந்தவர்களது பிள்ளைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, அவர்களது கல்வி கடன் சுமை ஏற்படாமல் தடுக்க வேண்டும். எனவே அரசு ஏற்கனவே வழங்கி வரும ஸிஜிணி 25 சதவீதத்தில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் இடத்தை செய்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.
⦿ 8- செய்தியாளர் அங்கீகார அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை
அரசு அமைக்கும் “செய்தியாளர் அங்கீகாரக் குழு”வின் பரிந்துரையின் பேரில் ஆண்டுதோறும் நாளிதழ்கள்/ தொலைக்காட்சிகள்/ செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) வழங்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப் பெற்ற பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு வசதியாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க ஓராண்டு காலத்திற்குச் செல்லத்தக்க வகையில் இலவசப் பயண பேருந்து அட்டை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இலவசப் பயண பேருந்து அட்டைகள் வழங்குவதற்கான தொகையைப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இத்துறை ஈடுசெய்கிறது.
தமிழக அரசு செய்தித்துறையைச் சேர்ந்தவர்களின் நலன் கருதி வழங்கப்படும் செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை வழங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டு செய்தித் துறை அல்லாதவர்களுக்கும், தகுதி இல்லாவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை தகுதியானவர்களுக்கு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.
⦿ 9-தாலுக்கா செய்தித்துறையினருக்கு அரசு சலுகைகள்
மாவட்ட செய்தியாளர்களுக்கு மட்டுமே அரசு சலுகைகள் கிடைக்கின்றது. ஆனால் தாலுக்கவில் பணிபுரியும் செய்தியாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். தாலுக்காக்கள் ஒன்றிணைந்ததுதான் மாவட்டம், எனவே தாலுக்காவில் பணிபுரியும் செய்திதுறையினருக்கு அரசு சலுகைகள் சென்றடைய ஆவணம் செய்யுமாறு பணிவன்புடன் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.
⦿ 10-பண்டகசாலை
செய்தித்துறையில் பணியாற்றுபவர்கள் சலுகை விலையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி பயன்பெறுமாறு பண்டகசாலை வசதி ஏற்படுத்தி தந்து உதவுமாறு தங்களை பணிவன்புடன் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.
⦿ 11-சிறப்பு அனுமதி
சுற்றுலா தலங்கள், புராணம் மற்றும் ஆன்மிக தலங்கள் போன்ற இடங்களில் செய்தி சேகரிக்க, டாக்குமெண்டரி எடுக்க செய்தித்துறையினருக்கு வசதியாக டூரிஸ்ட் பாஸ், கோயில் பாஸ், தமிழ்நாடு ஹோட்டலில் தங்குவதற்கு 50% கட்டண சலுவை வழங்குமாறு பணிவன்புடன் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.
⦿ 12-டோல் ஃபிரீ கட்டணச் சலுகை
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு டோல் ஃபிரீயில் இலவசமாக செல்லவோ அல்லது சலுகை கட்டணம் செலுத்தவோ வழிவகை செய்யவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.
⦿ 13-தொழிற்சங்க சட்டம் 1926-ன் கீழ் மட்டுமே சங்கம் பதிவு
பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் பதிவுத்துறை (Register Office) Societies Registration Act 1975-ன் கீழ் 7 பேர் கொண்டு சங்கம் என்ற பெயரில் பதிவு செய்து தவறான நடவடிக்கைகளிலும், பத்திரிகையாளர்களுக்கு சேரவேண்டிய பயன்களையும் தட்டிப் பறிக்கின்றனர். இதனால் போலி பத்திரிகையாளர்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தொழிற்சங்க சட்டம் 1926-ன் (Under Trade Union Act 1926) கீழ் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் மட்டுமே பத்திரிகையாளர்கள் சங்கம் பதிவு செய்யவேண்டும் என்ற திருத்தத்தை செய்து ஜனநாயகத்தின் நான்காவது தூணான செய்தித்துறையை பாதுகாக்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது
⦿ 14-நல வாரியம்
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் பதிவு செய்து முன்னணி செய்தித்தாள்களில் பணிபுரிபவர்களை கொண்டு இயங்கி வரும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்-ஐ தமிழக அரசு செய்தித்துறை நலவாரியத்தில் ஒரு உறுப்பினராக இணைக்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.
மேற்கூறிய அனைத்து கோரிக்கைகளையும் தீர்மானமாக மார்ச் 19, 2023ம் தேதி அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நன்றி..! நன்றி..!
இவ்வாறு காலச்சக்கரம் நாளிதழ் எக்ஸ்கியூடிவ் எடிட்டரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவருமான டாக்டர் கா.குமார் அவர்கள் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்களிடம் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Click here: https://www.nju1926.com/
No comments
Thank you for your comments