Breaking News

சென்னை மாநகராட்சிக்கு ரூ.2,573.54 கோடி கடன்

சென்னை: 

சென்னை மாநகராட்சிக்கு ரூ.2573.54 கோடி கடன் உள்ளது. மேலும், அரசு துறைகளுக்கு 728 கோடி ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் உள்ளது.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வகையில் ஆண்டுக்கு 7,686 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயில் 1,939.98 கோடி ரூபாய் பணியாளர் சம்பளம் மற்றும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும், 231.72 கோடி ரூபாய் நிர்வாக பணிகளுக்கு செலவிடப்படுகிறது. இயந்திரம், கட்டடம் உள்ளிட்ட பழுது பார்த்தல், பராமரிப்பு ஆகியவற்றிற்கு 1,434.06 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மேலும், 11 மண்டலங்களில் குப்பை கையாளும் பணிகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கு 53 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.



மீதமுள்ள தொகை மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய நிதி, உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி ஆதாரங்கள் வாயிலாக, மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, சாலை சீரமைத்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்கு, கொசு ஒழிப்பு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

🔥 Also Read : என்ஜேயூ தலைவர் டாக்டர் கா.குமார் செய்தித்துறை அமைச்சரிடம் கோரிக்கை

இந்நிலையில், சென்னை மாநகராட்சி உலக வங்கி, ஜர்மன் வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வகையில் வாங்கிய கடன் 2,573.54 கோடி ரூபாயாக உள்ளது. அத்துடன், சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தாரர்களுக்கு 140 கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவை வைத்துள்ளது. மேலும், குடிநீர் வாரியம், மின் வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு 728 கோடி ரூபாய் செலுத்தப்படாமல் உள்ளது.

கடந்த மூன்று நிதியாண்டு கடன் விபரம்:

நிதியாண்டுகடன் (ரூ)ஒப்பந்தாரர்கள் நிலுவைஅரசு துறைகளுக்கு நிலுவை
2021 – 222,715.17 கோடி218.57 கோடி511.97 கோடி
2022 – 232,591.83 கோடி279.43 கோடி373.51 கோடி
2023 – 242,573.54 கோடி140 கோடி728 கோடி

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,  

"கடந்த 2021-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி கடன் 2,715.17 கோடி ரூபாய் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 141.63 கோடி ரூபாய் கடனை அடைத்துள்ளோம். அதேநேரம், சென்னையில் வசிக்கும் ஒரு கோடி மக்களுக்கான பல்வேறு வளர்ச்சி பணிகள், நோய் தடுப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தற்போது, சொத்து வரி வசூலிப்பில் தீவிரம் செலுத்தி வருகிறோம். சொத்து வரி போன்ற பல்வேறு வருவாய் வாயிலாக மாநகராட்சியின் நிதி பற்றாக்குறை மற்றும் கடன் சுமை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர்கள் கூறினர்.

No comments

Thank you for your comments