காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரமோற்சவத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் திங்கள்கிழமை கோயில் திருக்குளத்தில் விமரிசையாக நடைபெற்றது.
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் பிரமோற்சவம் கடந்த பிப்.25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மார்ச்.3 ஆம் தேதி தேரோட்டமும், 6 ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது. பிரமோற்சவத்தின் 11 வது நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழை உற்சவர் காமாட்சி அம்மன் சரப வாகனத்தில் வீதியுலா சென்று ஆலயம் வந்து சேர்ந்தார். பின்னர் மீண்டும் அலங்கார மண்டபத்திலிருந்து லட்சுமி,சரஸ்தி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் திருக்கோயில் வளாகத்திற்குள் உள்ள திருக்குளத்திற்கு மங்கள இசை வாத்தியங்களுடன் எழுந்தருளினார்.
திருக்குளத்தில் உள்ள மண்டபத்தில் சிறப்பு யாகமும் பின்னர் திருக்குளத்தின் படிக்கட்டுகளில் வைத்து அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடந்தன.கோயில் ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரிகள் அபிஷேகங்களை நடத்தியதை தொடர்ந்து அஸ்திரதேவருடன் திருக்குளத்தில் புனித நீராடினார்.இதன் தொடர்ச்சியாக கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர்,அறநிலையத்துறை செயல் அலுவலர் ந.தியாகராஜன், மணியக்காரர் சூரியநாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகர்கள், நிர்வாகிகள், பக்தர்கள் பலரும் திருக்குளத்தில் இறங்கி புனித நீராடினார்கள். இந்நிகழ்வின் போது வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
இதனையடுத்து திருக்குளத்தின் மண்டபத்திலிருந்து ஆலயத்தை வலம் வந்து மீண்டும் அலங்கார மண்டபத்துக்கு உற்சவர் காமாட்சி அம்மன் எழுந்தருளினார். இரவு கர்நாடக பாடகர் வி.வி.பிரசன்னா தலைமையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை இரவு தங்கக்காமகோடி விமானத்தில் வீதியுலா மற்றும் புதன்கிழமை அதிகலையில் விஸ்வரூப தரசினத்துடனும், மாலையில் விடையாற்றி உற்சவத்துடனும் விழா நிறைவு பெற்றது.
No comments
Thank you for your comments