காஞ்சி பட்டுச்சேலையில் லலிதா சஹஸ்ரநாமத்தின் 1000 மந்திரங்கள் வடிவமைப்பு
காஞ்சிபுரம் :
லலிதா சஹஸ்ரநாமத்தின் 1000 மந்திரங்களை காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் வடிவமைக்கப்பட்டு அச்சேலை மலேசியாவுக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவில் வசித்து வரும் எஸ்.குமாரவேல், கு.கலையரசி தம்பதியர் பட்டுச்சேலைகளில் இறைவனின் திருஉருவங்கள், தலைவர்களின் முகத்தோற்றங்கள், விலங்குகள், இயற்கைக் காட்சிகள் ஆகியனவற்றை வடிவமைத்துக் கொடுக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.
இவர்களிடம் மலேசியாவை சேர்ந்த பட்டுச்சேலை வணிகரான நாராயணமூர்த்தி என்பவர் பட்டுச்சேலையில் லலிதா சஹஸ்ரநாமம் மந்திரங்களை வடிவமைத்து கொடுக்குமாறும், சேலை முந்தானையில் ஹயக்ரீவர்,காமாட்சி அம்மன் இருப்பது போன்றும் வடிவமைத்துக் கொடுக்குமாறும் கேட்டிருந்தார்.
அதன்படி கடந்த 48 நாட்களாக தக்காளி நிற பட்டுச்சேலையில் மலேசியாவை சேர்ந்தவர் கேட்டுக்கொண்ட வடிவத்தை செய்து கொடுத்துள்ளார். இச்சேலையை மலேசியாவை சேர்ந்த நாராயணமூர்த்தியிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
இது குறித்து பட்டுச்சேலைகள் உற்பத்தியாளர் கே.குமாரவேல் கூறியது..
தக்காளி நிற பட்டுச் சேலையில் லட்சுமி ஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாம மந்திரங்களை சொல்வது போலவும்,அதை காஞ்சி காமாட்சி அம்மன் பார்வையிடுவது போலவும் சேலையின் முந்தானை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சேலையின் உடல்பகுதி முழுவதும் லலிதா சஹஸ்ரநாமத்தின் 1000 மந்திரங்களை பதிவு செய்துள்ளோம். இச்சேலை செய்ய ஆடர் கொடுத்த மலேசியாவை சேர்ந்த நாராயணமூர்த்தியிடம் வழங்கப்பட்டு அதை அவர் மலேசியாவுக்கு எடுத்து சென்றார்.
இதே போல சேலை முந்தானையில் திருமிச்சியூர் லலிதாம்பிகை படமும், மற்றொரு பட்டுச் சேலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனும் இருப்பது போலவும் சேலை உடலில் லலிதாசஹஸ்ரநாம மந்திரங்கள் இருக்குமாறும் மேலும் 2 பட்டுச் சேலைகள் செய்ய முன்பணம் கொடுத்துள்ளார்.ஒரு சில தினங்களில் அச்சேலைகளையும் உற்பத்தி செய்ய இருப்பதாகவும் கே.குமாரவேல் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments