காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. பஞ்சபூத தலங்களில் மண் தலன் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் பலரும் வேத மந்திரங்கள் முழங்க திருவிழா கொடியை கொடி மரத்தில் ஏற்றினார்கள். கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடந்தன. ஏலவார் குழலி அம்பிகையும் ஏகாம்பரநாதர் சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரத்துக்கு அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
கொடியேற்ற விழாவில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம். வி .எம். வேல்மோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெகநாதன், விஜயகுமார், வரதன் ,செந்தில்குமரன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், திருக்கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, காஞ்சிபுரம் உதவி ஆணையர் பொறுப்பு லட்சுமி காந்தன் பாரதி, குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் ந. தியாகராஜன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழா 14 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. தினமும் காலையும், மாலையும் இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் எழுந்தருளி காஞ்சீபுரத்தில் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராவண அவதாரம் உற்சவம் வருகிற 30ம் தேதி நடக்கிறது.
விழாவினை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி 63 நாயன்மார்கள் திருவிழாவும் இரவு வெள்ளித்தேரோட்டமும் நடக்கிறது. மறுநாள் ஏப்ரல் மாதம் முதல் தேதி திருவேகம்பம் சிவாலய அறக்கட்டளை சார்பில் மகாரதம் எனும் தேரோட்டம் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 3ம் தேதி இரவு தல மகிமை காட்சியான வெள்ளி மாவடி சேவையும், 5ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும் வெகு விமரிசை யாக நடைபெற உள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி 108 கலசாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது திருவிழாவை முன்னிட்டு நந்தி மண்டபம் ,தெப்பக்குளம், ராஜகோபுரம் உட்பட ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பிரம்மோற்சவ விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.


No comments
Thank you for your comments