திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயிலில் தேரோட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியில் அமைந்துள்ள மரகதவல்லித்தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் கோயிலில் வருடாந்திர பிரமோத்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும்,108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும் இருந்து வருவது காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியில் அமைந்துள்ள மரகதவல்லித்தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் கோயில்.
இக்கோயில் வருடாந்திர பிரமோத்சவம் நிகழ் மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து தினசரி பெருமாள் காலையும்,மாலையும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காராமாகி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவைக்காட்சி நிகழ் மாதம் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேரில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் உற்சவர் விஜயராகவப் பெருமாள் ராஜ அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருப்புட்குழியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்தும் இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி திருப்புட்குழியில் பல இடங்களில் தனியார் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர்,மோர், அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் தலைமையில் கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments