காஞ்சிபுரத்தில் பாலாற்றுக்கு எழுந்தருளிய சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
காஞ்சிபுரம், பிப்.7-
சின்னக்காஞ்சிபுரத்தில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள் புதன்கிழமை சேஷ வாகனத்தில் அலங்காரமாகி காஞ்சிபுரத்தில் பாலாற்றங்கரைக்கு எழுந்தருளி அங்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் நகர் சின்னக்காஞ்சிபுரத்தில் பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் மிக்கது சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில்.இக்கோயிலில் ஆண்டு தோறும் பெருமாள் தை மாதம் மக நட்சத்திரத்தின் போது பாலாற்றுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
தை மாத மக நட்சத்திரத்தையொட்டி ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் ஆலயத்திலிருந்து சேஷ வாகனத்தில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காஞ்சிபுரத்தில் பாலாற்றங்கரைக்கு எழுந்தருளினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சிறப்புத் திருமஞ்சனமும்,பின்னர் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனையடுத்து பெருமாள் மீண்டும் சேஷ வாகனத்தில் அலங்காரமாகி ஓரிக்கையில் உள்ள மகா பெரியவர் மணி மண்டபம்,வேளிங்கப்பட்டரை, தேசிகர் சந்நிதி வழியாக மீண்டும் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தார்.அங்கு திருமழிசை ஆழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் நல்லப்பா நாராயணன் செய்திருந்தார்.
படவிளக்கம் : சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

No comments
Thank you for your comments