காஞ்சிபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் - ஆட்சியர் பங்கேற்பு
காஞ்சிபுரம், ஜன.25-
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பங்கேற்று சிறந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.பேரணியை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இப்பேரணியானது ஆட்சியர் அலுவலகத்தில் வந்து நிறைவு பெற்றதும் ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வாக்காளர் விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தேர்தல் விழிப்புணர்வு ஊமை நாடகம் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளையும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் நடத்தினார்கள்.
வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியையும் ஆட்சியர் மா.ஆர்த்தி வாசிக்க அதனைத் பின் தொடர்ந்து அனைவரும் வாசித்தனர். மகளிர் சுய உதவிக் குழுக்களால் கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிறைவாக சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களான கூரம் எம்.சந்திரா, வெங்கடாபுரம் எல்லப்பன், காஞ்சி புரம் பாலசரஸ்வதி, ஆரியம்பாக்கம் ரவிக்குமார், கரூர் ரேவதி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்விற்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, கோட்டாட்சியர் கனிமொழி, வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு வட்டாட்சியர் எம்.ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


No comments
Thank you for your comments