திம்மசமுத்திரத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பாரிவேட்டை உற்சவம்
காஞ்சிபுரம், ஜன.17:
பாரிவேட்டை உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் கிராமத்தில் ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில்.இத்திருக்கோயிலில் பாரிவேட்டை உற்சவத்தை முன்னிட்டு தனித்தனியாக பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார் குழலியும், ஏகாம்பரநாதரும் திம்மசமுத்திரம் கிராமத்திற்கு புறப்பட்டனர்.
அவர்களை திம்ம சமுத்திரம் கிராம பொதுமக்கள் காவடியாட்டம்,மயிலாட்டம் மற்றும் 1000க்கும் மேற்பட்ட சிவவாத்தியங்கள் முழங்க ஆலயத்திலிருந்து கிராமத்துக்கு வரவேற்று அழைத்து சென்றனர்.
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் ஓதுவார் தமிழ்ச் செல்வன் தலைமையில் திருமுறை பாராயணக் கோஷ்டியினரும் சுவாமியுடன் வந்தனர்.
சுவாமியையும், அம்மனையும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பூரண கும்ப மரியாதையோடு வரவேற்று சிறப்பு வழிபாடுகள் செய்து வழிபட்டனர்.
திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள திரிபுராந்தகேஸ்வரர் ஆலயத்திற்கு எழுந்தருளி அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் சுவாமியும்,அம்மனும் தங்கியிருந்தனர்.இருவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளையும் ஏகாம்பரநாதர் கோயில் பூஜகர் கே.ஆர்.காமேசுவர குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்தனர்.
ஏகாம்பரர் வருகையை முன்னிட்டு திரிபுராந்தகேசுவர் கருவறையில் சரவணப் பொய்கை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திரிபுராந்தகேசுவரரை தரிசித்தனர்.
ஆலய வளாகத்தில் அன்னதானமும்,பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.சூரியனார் கோயில் ஆதீனம் சிவாக்கர தேசிக சுவாமிகள்திருமுறை அருளுரை நிகழ்த்தினார்கள்.
விழாவில் அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் ந.தியாகராஜன்,வேதமூர்த்தி,காஞ்சி சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி ஆர்.நந்தகுமார் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாரிவேட்டை விழாக்குழு தலைவர் டி.எஸ்.லோகநாதப்பிள்ளை,செயலாளர் டி.டி.ராஜாமணி,பொருளாளர் சி.ஆனந்தன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


No comments
Thank you for your comments