வேளியூரில் விவசாயிகள் கருத்தரங்கம்
காஞ்சிபுரம், ஜன.23-
காஞ்சிபுரம் அருகே வேளியூர் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் கூடிய கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது வேளியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
விவசாயிகளின் அனுபவங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகளும், தொன்போஸ்கோ விவசாயக்கல்லூரி மாணவியர்களும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பா.இளங்கோவன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணை முறை,செம்மை நெல்சாகுபடி, பஞ்ச கவ்யா தயாரிக்கும்விதம், வேம்புக் கரைசலின் மருத்துவப் பயன்பாடுகள் காட்டுப்பன்றிகளை வேளாண் கருவிகள் மூலமாக விளைநிலங்களுக்குள் வராமல் தடுக்கும் முறைகள், இயற்கை வேளாண்மை ஆகியன குறித்து விரிவாக விளக்கினார்.
முன்னோடி விவசாயி ப.எழிலன் கலந்து கொண்டு பாரம்பரிய அரிசி மற்றும் மூலிகை செடிகள் சாகுபடி யுக்திகள் குறித்து விளக்கி பேசினார். இக்கருத்தரங்கில் வேளாண் கல்லூரி மாணவியர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் அக்கிராமத்தில் தங்கியிருந்து விவசாயிகளின் அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கிற்கு வேளாண்மை அலுவலர்கள் மு.பிரீத்தி, எஸ்.ஜமுனாராணி, வேளாண் கல்லூரி முதல்வர் கே.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளியூர் ஊராட்சி மன்ற தலைவர்சுமதி ஜெயராமன் வரவேற்றார்.கருத்தரங்கில் வேளாண் கல்லூரியை சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் கார்த்திக்,பேராசிரியை புவிலா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments