காற்று மாசு புகார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...
ஈரோடு :
நேற்று ( ஜனவரி 2 ) கலெக்டர் அலுவலகத்தில், ஈரோடு மரப்பாலம் அடுத்த சீனியன் தோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மனு கொடுத்தனர். அத்துடன் காற்று மாசு புகார் மீது கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படும் ஆணையையும் இணைத்து மனு கொடுத்திருந்தனர்.
இதைப்பற்றி அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், தங்களது பகுதியில் 500 கற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், தங்களது பகுதி குடியிருப்பு பகுதியாகும் ஆனால் அப்பகுதியில் இயங்கி வரும் பழனியப்பா டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சத்குரு டெக்ஸ்டைல்ஸ் ஆகிய இரண்டு ஜவுளி நிறுவனங்கள் காடா மற்றும் பல்வேறு துணிகளை கொண்டு வந்து அதை தங்களது குடோனில் வைத்து தரம் பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பொது மக்கள் தூங்கிக்கொண்டிருக்கும் நள்ளிரவு நேரங்களில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதாகவும், இதனால் தண்ணீர், காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதாகவும், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் ஆஸ்துமா உட்பட பல்வேறு நோய்களால் பெரிதும் பாதிக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது சம்பந்தமாக கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கடந்த 2017 இல் இருந்து பல மனுக்கள் தரப்பட்டு அதன் மீது மாசுக்கட்டுப்பாடு, மாநகராட்சி மற்றும் கலெக்டர் அவர்கள்ளின் நடவடிக்கை போன்ற பல நடவடிக்கை எடுக்கப்பட்டும் எந்த வித பலனும் இல்லாததால் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, நீதிபதி தனது உத்தரவில் கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் புகார்தாரரின் மனுவை விசாரித்து சட்டத்தின்படியும், தகுதியின் அடிப்படையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவும் மனுதாரரையும் எதிர் மனுதாரர்களான ராஜேந்திர கோத்தாரி, ஏ.பி. சீனிவாசன் ஆகியோரை விசாரிக்கவும் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டுமான விதிகள் 2019 இன் படி துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த ஆணையை அமல்படுத்தக்கோரி இன்று கலெக்டர் அலுவலகத்தில் நீதிமன்ற ஆணை இணைக்கப்பட்ட மனு கொடுக்கப் பட்டுள்ளது எனவும், அப்பகுதி குடியிருப்பு பகுதியாகும் இனிமேல் சட்ட விரோதமாக ஜவுளி குடோன்கள் குடியிருப்புகளில் செயல்படுவதை தடுக்க வேண்டும் எனவும், இந்த இரண்டு நிறுவனங்களைத் தொடர்ந்து பல புதிய நிறுவனங்களும் அப்பகுதியில் செயல்பட துவங்கியுள்ளதாகவும், அங்கிருந்து இந்த மாசு ஏற்படுத்தும் குடோன்கள் மற்றும் தொழிற்சாலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட இரு கட்டிடங்கள் மீதும் ஏற்கனவே அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது கண்டறியப்பட்டு அதற்கான விளக்கத்தை கேட்டு மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments