கூரம் ஸ்ரீசெல்வ விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம், ஜன.26-
காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் கீழாண்டை தெருவில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் திருக்கோயில். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தையொட்டி நிகழ் மாதம் 25 ஆம் தேதி புதன்கிழமை காஞ்சிபுரம் இ.பத்மநாப ஐயர் தலைமையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
விக்னேசுவர பூஜை, மகா கணபதி ஹோமம் ஆகியனவும் நடைபெற்றது.வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூர்ணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் புனித நீர்க்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கோயில் பூஜகர் பாலாஜி மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகளையும் செய்தார்.விழாக்குழுவினர் சார்பில் அன்னதானமும் நடைபெற்றது.
கூரம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் கீழாண்டை தெரு நாட்டாண்மைதாரர்கள், கூரம் கிராம பொதுமக்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments