காஞ்சிபுரம் ஸ்ரீமுத்து விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம், ஜன.26-
காஞ்சிபுரம் நகர் திருப்புக்கூடல் தெருவில் அமைந்துள்ள முத்து விநாயகர் கோயிலில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் நகர் பெரியகாஞ்சிபுரம் பகுதியில் திருப்புக்கூடல் தெருவில் அமைந்துள்ளது முத்து விநயாகர் திருக்கோயில். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டதுடன் 80 அடி நீள மகா மண்டபம் மற்றும் தெட்சிணாமூர்த்தி, துர்க்கை,சந்தைவெளியம்மன், வள்ளி, தெய்வானை சமேத முருகர், பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நிகழ் மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை பூஜகர் கே.ஆர்.காமேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் நடந்தன. விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம் ஆகியனவும் நடைபெற்றன.
மறுநாள் 25 ஆம் தேதி புதன்கிழமை கோபூஜை,கஜபூஜை ஆகியனவும் நடைபெற்றன. வியாழக்கிழமை மகா பூர்ணாகுதி தீபாராதனைக்குப் பிறகு மூலவர் கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து கோயில் பூஜகர் ஸ்ரீதர் குருக்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தார்.சிறப்பு அலங்கார தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது. இரவு முத்து விநாயகர் மூஷிக வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்புக்கூடல் தெரு மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments