Breaking News

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி வேடன் வேடத்தில் வீதியுலா

காஞ்சிபுரம், ஜன.13-

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி வெள்ளிக்கிழமை வேடன் வேடத்தில் அலங்காரமாகி செவிலிமேடு ராமானுஜர் கோயிலிலிருந்து கோயிலுக்கு வீதியுலாவாக எழுந்தருளும் விழா நடைபெற்றது.



ராமானுஜரை விந்திய மலைக்கு கடத்திச் சென்று கொலை செய்ய திட்டமிட்ட போது பெருமாள் வேடன் வேடம் தரித்து சென்று அவரைக் காப்பாற்றிய நிகழ்வு திருவிழாவாக காஞ்சிபுரத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதனையொட்டி காஞ்சிபுரம் தேவராஜசுவாமி ஆலயத்திலிருந்து மேனா பெட்டியில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் கோயிலுக்கு சென்றார்.பின்னர் உற்சவர் ராமானுஜர் அருகில் உள்ள சாலைக்கிணறுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்த பிறகு உற்சவர் தேவராஜசுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.

இதனையடுத்து உற்சவர் தேவராஜசுவாமி ஸ்ரீதேவி,பூதேவியருடன் வேடன் வேடத்தில் அலங்காரமாகி வீதியுலாவாக வந்து விளக்கொளிப் பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினார். அங்கு தூப்புல் வேதாந்த தேசிகருக்கு மாலை மாற்றும் வைபவமும்,தேசிகப் பிரபந்தம் சாற்றுமுறை உற்சவமும் நடந்தது.

பின்னர் மீண்டும் அங்கிருந்து பெருமாள் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்.ராமானுஜர் ஆலயத்தில் உற்சவர் தேவராஜசுவாமிக்கு நடைபெற்ற சிறப்புத் திருமஞ்சனம் நிகழ்ச்சியிலும், அலங்கார ஆராதனைகள் நிகழ்ச்சியிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.காஞ்சி மாநகராட்சி மண்டல தலைவர் செவிலிமேடு மோகன் குடும்பத்தினர் சார்பில் அன்னதானமும் நடைபெற்றது.


No comments

Thank you for your comments