Breaking News

கைத்தறி கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார் அமைச்சர் சு.முத்துசாமி

வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள்,  ஈரோடு மாவட்டத்தில், ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகத்தின் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில், மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.



ஈரோடு மாவட்டம், பவானி சாலையில் உள்ள தேவி மஹாலில் இன்று (28.12.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணிஅவர்கள் தலைமையில், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. சு.நாகரத்தினம்,  ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகத்தின் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் கைத்தறி துறையின் சார்பில், மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை தொடங்கிவைத்து, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள்தெரிவித்ததாவது,

தமிழ்நாடு அரசின் கைத்தறி துறையின் சார்பில், ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகத்தின் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையினை யொட்டி, மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது, இன்று (28.12.2022) முதல் 11.01.2023 வரை 15 தினங்களுக்கு காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை ஈரோடு மாவட்டம், பவானி சாலையில் உள்ள தேவி மஹாலில் நடைபெறுகிறது.

மேலும், இக்கண்காட்சியில், சேலம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், திருச்செங்கோடு, கடலூர், கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களின் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கோவிட்-19 வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டுள்ளனர். மேலும், இக்கண்காட்சியில் 60 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு 113 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் மற்றும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமும் (கோ-ஆப்டெக்ஸ்) ஈரோடு நிறுவனமும் தங்களது போர்வைகள், கோரா சேலைகள், பட்டு சேலைகள், படுக்கைவிரிப்புகள், ஜமுக்காளங்கள், மேட்கள் ஆகிய கைத்தறி இரகங்களுடன் பங்கு பெறுகின்றன. அனைத்து கைத்தறி ஜவுளி இரகங்களுக்கும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். கண்காட்சியின் விற்பனை குறியீடாக ரூ.80.00 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சியில், 114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 188 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், 55 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் உள்ளது. இதில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 55,151 உறுப்பினர்களும், விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கத்தில் 7327 உறுப்பினர்களும் உள்ளனர். 

ஈரோடு சரகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் 8543 கைத்தறி நெசவாளர்களும், விசைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 750 யூனிட் மின்சாரம் என 9984 விசைத்தறி நெசவாளர்களும் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், சென்னிமலை, விஜயமங்கலம், காஞ்சிகோவில் ஆகிய பகுதிகளில் பெட்சீட், தலையணை உறை, மெத்தை விரிப்பு, துண்டு, சால்வை, டிரில், ஷாப்பிங் பேக் ஆகிய உற்பத்தி இரகங்களும், தாண்டாம்பாளையம், சிவகிரி, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் டஸ்டர், சால்வை ஆகிய இரகங்களும், ஈரோடு, அவல்பூந்துறை ஆகிய பகுதிகளில் பெட்சீட், தலையணை உறை, மெத்தைவிரிப்பு, துண்டு, சால்வை, வேட்டி ஆகிய இரகங்களும், பவானி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் ஜமக்காளம், சால்வை ஆகிய இரகங்களும், கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மேட், சால்வை ஆகிய இரகங்களும், சத்தியமங்கலம், தொட்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் கோராசேலை, காட்டன் சேலை, செயற்கைபட்டு சேலை ஆகிய இரகங்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் 242.05 மீட்டர் கைத்தறி இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, இதில் 241.55 மீட்டர் இரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 234.43 மீட்டர் விசைத்தறி இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, 204.69 மீட்டர் இரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம், நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம், மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதிபீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரிசுரக்ஷா பீமா யோஜனா, சிக்க்ஷா சகயோக் யோஜனா திட்டம், நெசவாளர் பசுமை வீடுகள் திட்டம், தார் சுற்றும் இயந்திரம், நெசவாளர் நல்வாழ்வு காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி நெசவாளர் இ-முத்ரா திட்டம், மாநில சங்க உற்பத்தி திட்டம், நெசவாளர்  பயிற்சி சமர் திட்டம் உள்ளிட்ட நெசவாளர் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும், கைத்தறி கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு, கைத்தறி பொருட்களை வாங்கி, நெசவாளர்களின் வாழ்வு மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

இக்கண்காட்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி நவமணிகந்தசாமி, துணை மேயர் வெ.செல்வராஜ், மாநகாட்சி மண்டல குழு தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் திருமதி.கஸ்தூரி, உதவி இயக்குநர்கள் பி.சரவணன் (கைத்தறி துறை), கோபிநாத் (வீரப்பன் சத்திரம் விசைத்தறி), மோகன்குமார் (அன்னை சத்யா கூட்டுறவு சங்கம்),  தமிழ்செல்வன் (மேலாண்மை இயக்குநர் / தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலை) உட்பட கூட்டுறவு சங்க தலைவர்கள், நெசவாளர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments