அரசு பேருந்து நடத்துனரிடம் கைவரிசை காட்டிய இளைஞர்.... பொதுமக்கள் தர்ம அடி...
சிதம்பரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, தடம் 192 எண் கொண்ட, அரசு பேருந்து சேலம் செல்வதற்காக விருத்தாச்சலம் பேருந்து நிலையத்திற்கு நேற்று இரவு 10:25 மணிக்கு வந்தடைந்தது.
அப்போது பேருந்து நடத்துனர் சுகுமாரன், பயணிகளின் லக்கேஜ்களை எடுத்துக் கொடுப்பதற்காக, பேருந்தில் பக்கவாட்டில் உள்ள லக்கேஜ் வைக்கும் கதவை திறந்து உள்ளார். அப்போது நடத்துனர் சுகுமாரன் எதிர்பார்க்காத நேரத்தில், அவர் தோளில் மாட்டி இருந்த பணப்பையில், கையை விட்டு, ரூபாய் 6 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு, இளைஞர் ஒருவர் ஓடி உள்ளார்.
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
இதனைப் பார்த்து நடத்துனர் கூச்சலிடவே, அங்கிருந்த பொதுமக்கள், திருடி சென்ற இளைஞரை துரத்தி பிடித்தனர். அப்போது திருடிய இளைஞரை, பொதுமக்கள் சராமாரியாக தர்ம அடி கொடுத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதிக மது போதையில் இளைஞர் இருந்த காரணத்தினாலும், பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததாலும், தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்த இளைஞரை, விருத்தாச்சலம் காவல்துறையினர் , ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருடிய இளைஞர் மது போதையில் இருந்த காரணத்தினால், அவரது பெயர் மற்றும் ஊர் என்ன என்பது குறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பேருந்து நடத்துனரிடம் திருடிய பணம், பிடிப்பட்ட இளைஞரிடம் இல்லாததால், இச்சம்பவத்தில் மேலும் சிலர் இருக்கலாம் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பேருந்து நடத்துனரிடம், பணத்தை திருடி, இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவத்தால், விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


No comments
Thank you for your comments