Breaking News

இருசக்கர வாகனத்தில் இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம்... தாயின் ஆசையை நிறைவற்றி வரும் மகன்!

காஞ்சிபுரம், டிச.28 :

தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தனது தாயரை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.



கர்நாடக மாநிலம் மைசூர் போகாதி பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி,சூடாரத்னம்மா தம்பதியரின் ஒரே மகன் கிருஷ்ணகுமார்(44)தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவரது தந்தையின் மரணத்துக்குப் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து தன் தாயாருடன் இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள், மடங்கள், ஆசிரமங்களுக்கு ஆன்மீகப் பயணம் செய்து வருகிறார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு மாடலுடைய பழைய இருசக்கர வாகனத்தில் தன் தாயாரை பின்புறம் அமர்த்திக்கொண்டு இதுவரை இந்தியாவில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு தன் தாயார் சூடாரத்னம்மாவுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர் மேலும் கூறியது..

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த எங்களுக்காக என் தாயார் கடுமையாக ஓய்வே இல்லாமல் உழைத்தார். என் தந்தையார் இறக்கும் வரை அவர்கள் வீட்டை விட்டு வெளியில் எங்குமே போனதில்லை.பக்கத்துல இருக்கிற கோயிலுக்கு கூட நான் போனதே கிடையாது எல்லா இடங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது என்றார். அப்போது நான் உங்களால தான் நல்லா இருக்கேன்,கவலையே படாதீங்க... உங்களை இந்தியா முழுவதும் உள்ள கோயில்களுக்கு கூட்டிக்கிட்டு போகிறேன் என்றேன். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்தியா முழுவதும் இருசக்கர வாகனத்தில் நானும்,அம்மாவும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.

அப்பா எனக்கு முதல் முதலாக கடந்த 2001 ஆம் ஆண்டு கொடுத்த இருசக்கர வாகனத்தில் தான் பயணிக்கிறோம். அப்பா கொடுத்த வாகனத்தில் செல்வதால் அவரும் எங்களோடு வருவது போன்ற உணர்வே வருகிறது.பணியின் போது கிடைத்த ஊக்கத்தொகையை சேமித்து வைத்திருந்தேன். அதைத்தான் இப்போது எடுத்து செலவு செய்கிறேன். கோயில்களில் மலை மீது ஏறும் போது அம்மாவால் ஏற முடியாது என்பதால் அவர்களை தூக்கிக்கொண்டு செல்வேன். எனக்கு 6 மொழிகள் தெரியும் என்பதால் மொழிப் பிரச்சினை இல்லை. இருவரும் தலைக்கவசம் போட்டுக்கொண்டு தான் பயணிப்போம். இருசக்கர வாகனப் பழுதுகளையும் நீக்கத் தெரியும்.கோயில்களிலும்,மடங்களிலும் தரும் உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறோம்.உடலுக்கு தீங்கு தரும் எதையும் சாப்பிடுவதில்லை.

நாம் ஒவ்வொருவருக்கும் பெற்றோர்கள் தான் பேசும் தெய்வங்கள்.அவர்கள் இருக்கும் போது அவர்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு செய்யாமல் அவர்கள் இறந்த பிறகு அவர்களின் உருவப்படத்தை வைத்துக் கொண்டு பொட்டு வைத்தும், பூ வைத்தும் வணங்குவது சிறிதும் நல்லதல்ல.பெற்றோர்களுக்கு செய்யும் சேவையே உயர்ந்த சேவை,அம்மாவை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் திருமணமும் செய்து கொள்ளவில்லை என்றும் கிருஷ்ணகுமார் தெரிவித்தார். எனக்கு கிடைத்த மகன் போல எல்லோரும் பிள்ளைகள் அமைய வேண்டும் எனவும் சூடாரத்னம்மா தெரிவித்தார்.

No comments

Thank you for your comments