சுற்றுலா பேருந்துகளால் காஞ்சியில் போக்குவரத்து நெரிசல் - பயன்பாட்டிற்கு வருமா? சுற்றுலா பயணிகள் வாகன நிறுத்துமிடம்
காஞ்சிபுரம்:
கோவில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் உலக புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில்,காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோவில்,பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்த்தலமாக விளங்கும் ஏகாம்பரநாதர் திருக்கோவில் என மிகவும் புகழ்மிக்க திருக்கோவில்கள் அமைந்திருக்கிறது. இத்தகைய திருக்கோவில்களில் சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆந்திரா, கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளை சேர்ந்த அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
மேலும் கார்த்திகை மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகளவிலானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்வர். இந்த நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கிய நாள் முதலே இத்திருக்கோவில்களுக்கு அதிகளவிலான ஐயப்ப பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்று வருகின்றனர்.
இந்த ஐயப்ப பக்தர்கள் வரக்கூடிய தனியார் பேருந்துகள்,வேன்கள்,கார்கள் ஆகியவைகள் காஞ்சிபுரம் மாநகர பகுதிகளின் சென்றுவரும் நிலையில் காஞ்சிபுரம் மாநகர பகுதிகளின் பிரதான சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. மேலும் எவ்வித வாகன நிறுத்தங்களும் இல்லாததால் அவர்கள் வரக்கூடிய அந்த வாகனங்களை பிரதான சாலைகளிலேயே நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஏகாம்பரநாதர் திருக்கோவில் சன்னதி தெரு பகுதியில் சாலையின் இருபுறமும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். மேலும் இந்த சாலையானது வேலூர், திருப்பதி, அரக்கோணம், திருத்தணி போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களாக இருக்கட்டும், பேருந்துகளாக இருக்கட்டும் இவ்வழியாகவே கடந்து சென்றாக வேண்டும். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடியவர்கள், பணிகளுக்கு செல்லகூடியவர் என அனைவருமே தாமதமாக செல்லும் நிலையானது ஏற்பட்டிருக்கிறது.
சுற்றுலா பயணிகளின் பேருந்துகளை நிறுத்த ஒலிமுகமதுபேட்டை பகுதியில் போதிய இடம் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தும் கூட பயன்பாட்டிற்கு வராததால் சாலைகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் உள்ளூர் மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை உடனடி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்துமிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.



No comments
Thank you for your comments