தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் குறித்த செய்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில்
(1) தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை) (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்)
(2) பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை) மற்றும்
(3) வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (அதிகபட்சமாக ரூ.2 இலட்சம் வரை) என்னும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களில் சேர்ந்து பயனடைய விரும்பும் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பிலும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியாவின் சார்பிலும் பங்கேற்று பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்களால் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றவர்கள் மட்டுமே www.sdat.tn.gov.in என்னும் இணையதளத்தின் வழியாக 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே அஞ்சல் வழியில்/நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.
தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர் வீரங்கனைகளுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை அவர்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கான செலவினங்களை திரும்ப வழங்கிடும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும்.
பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான வின்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு (High Level Selection Committee) மூலம் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் (Shortlisted Candidates) நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் அவர்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை 9514000777 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments