தொடர்ந்து 80 ஆண்டுகள் கொள்கை மாறாத மனிதராக இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு
காஞ்சிபுரம்,டிச.16
தொடர்ந்து 80 ஆண்டுகள் ஒரே கட்சியில் இருந்து சிறிதும் கொள்கை மாறாத மனிதராக இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன் என்று காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் தூண் அருகில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலரும்,எம்எல்ஏ.வுமான க.சுந்தர் தலைமை வகித்தார்.எம்பிக்கள் எஸ்.ஜெகத்ரட்சகன்,க.செல்வம்,எம்எல்ஏ. சிவிஎம்பி.எழிலரசன் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகர செயலாளர் சிகே.வி.தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் திமுக கழக பொதுச் செயலாளரும்,நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேராசிரியர் க.அன்பழகனின் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் பேசியதாவது..
பேராசிரியர் க.அன்பழகன் 100 ஆண்டுகள் வாழ்ந்தவர்.தொடர்ந்து 80 ஆண்டுகள் ஒரே கட்சியில் இருந்து சிறிதும் கொள்கை மாறாத மனிதராக இருந்தார்.புத்தகப் பிரியர்,மிகச்சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்,அவரைப் போல பேச்சாற்றல் யாருக்கும் இல்லை. அவரைப் போன்றவர்கள் கட்சியில் கொள்கைப்பிடிப்புடன் இருந்ததால் தான் இன்றும் கட்சியை யாராலும் அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. கட்சியில் பற்றோடு இருப்பவர்களை மக்கள் மதிப்பார்கள். ஆனால் கட்சியை சேதப்படுத்தியவர்களை கட்சிக்காரர்களே சேதப்படுத்தி விடுவார்கள்.
எம்ஜிஆரின் மடியில் நான் வளர்ந்தவன், அவர் எனக்கு எத்தனையோ உதவிகள் செய்திருந்தாலும் நான் திமுகவை விட்டு வர மாட்டேன் என்று சொன்னேன். என்னை அமைச்சராக ஆக்குகிறேன் என்று சொன்ன போதும் நான் திமுகவை விட்டு வரமாட்டேன் என்றேன். எனது நன்றி உங்களுக்குத் தான். ஆனால் எனது கட்சி திமுக தான் என்று உறுதியோடு இருந்தேன்.
கட்சிக் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் இருப்பவர்களை கட்சியே காப்பாற்றும். என்னைப் போல அன்பழகனைப் போல பலரும் கட்சியில் இருந்ததால் தான் கட்சிக்கு பல சோதனைகள் வந்த போதும் சாய்ந்து விடாமல் உயர்ந்து நிற்கிறது.மரணிக்கும் தருவாயில் கூட கழகத்தின் நினைவாகவே இருந்து மறைந்தவர் பேராசிரியர். நான் நினைத்ததை விட திறமைசாலியாக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இப்போதுள்ள ஆளுநர் எதிலும் கையெழுத்துப் போட மறுக்கிறார்.விரைவில் காலம் கனியும்,நிலைமை சீரடையும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளதாகவும் துரை முருகன் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம்,மேயர் மகாலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், நாகன், ஒன்றிய செயலளர்கள் பி.சேகர், ஞானசேகரன், டி.குமார், குமணன், பி.எம்.குமார், பேரூர் செயலாளர்கள் பாண்டியன், பாரிவள்ளல்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ்,பொதுக்குழு உறுப்பினர்கள் சிகாமணி, சீனிவாசன், எழிலரசி சுந்தரமூர்த்தி, சசிகுமார், பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், உட்பட கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments