இரு ஆண்டுகளில் 615 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.74 கோடி கடன்கள் - கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தகவல்
காஞ்சிபுரம்,டிச.2
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சார்பில் இரு ஆண்டுகளில் மட்டும் 615 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.74 கோடி கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாக அவ்வங்கியின் மேலாண்மை இயக்குநர் மு.முருகன் வெள்ளிக்கிழமை பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி செவிலிமேடு மகளிர் கிளையில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5லட்சம் மதிப்பிலான கடன்களை அவ்வங்கியின் மேலாண்மை இயக்குநர் மு.முருகன் வழங்கினார்.
விழாவில் இது குறித்து அவர் மேலும் பேசுகையில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் 615 பேருக்கு 3.74 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியிருக்கிறோம்.காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 52 மத்தியக் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அண்மையில் கோவையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மாநில அளவில் சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் மு.முருகன் பேசினார்.
விழாவிற்கு கூட்டுறவுச்சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ,மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் எஸ்.ரவிச்சந்திரன்,பொதுமேலாளர் ஜெ.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் கிளை மேலாளர் பி.இந்துமதி வரவேற்று பேசினார். ஏற்பாடுகளை வங்கி மேலாளர் பாலகுரு,கூட்டுறவு ஒன்றிய மேலாளர் முரளி,ஒன்றிய வளர்ச்சி அலுவலர் டி.வி.சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments