மோகனூரில் பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து 4 பேர் பலி-20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
சென்னை :
நாமக்கல் அருகே மோகனூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் தீப்பற்றி வெடித்ததில் மூன்று பெண்கள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். வெடி விபத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ளது மேட்டு தெரு. இந்தப் பகுதியில் பல ஆண்டு காலமாக நாட்டு பட்டாசு கடை நடத்தியவர் தில்லை குமார்(40). திருமணம் தவிர இறப்பு நிகழ்வு மற்றும் விழாக்களுக்கு பட்டாசுகளை விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் புத்தாண்டு தினத்திற்காகவும் வருகிற பொங்கல் தினத்திற்காகவும், திருவிழாவிற்காகவும் ஒரு டன் பட்டாசு உற்பத்தி செய்து மோகனூரில் தன் வீட்டின் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. எரிவாயு உருளைகளும் வெடித்துச் சிதறியதில் வீடு இடிந்து விழுந்தது.
இதை அறிந்த பக்கத்து வீட்டார்கள் சுதாகரித்துக் கொண்டு செல்வதற்குள் அருகே படுத்திருந்த பட்டாசு கடை உரிமையாளர் தில்லைகுமார் மற்றும் அவரின் அருகே இருந்த பெரியங்காள் என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தில்லைகுமாரின் மனைவி பிரியா கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். இதைத் தவிர்த்து மோகனூரில் தில்லைகுமாரின் தாய் செல்வியும் உயிரிழந்தார்.
இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாமக்கல் பரமத்தி பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பட்டாசு வெடித்துச் சிதறியில் அருகில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்பாக சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மோகனூர் காவல் ஆய்வாளர் தங்கவேல் பட்டாசு வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
No comments
Thank you for your comments