Breaking News

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது... 13 லட்சம் மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகளை மீட்ட சூலூர் போலீசார்

கோவை:

சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்து, 13 லட்சம் மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகளை  சூலூர் போலீசார் மீட்டனர்.




கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளை கண்காணித்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்,  உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்டதுணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

இது சம்மந்தமாக தனிப்படை காவல் துறையினர் குற்றம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தும் தீவிர வாகன தணிக்கை செய்தும் தேடி வந்த நிலையில் சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர்களை விசாரணை செய்தபோது அவர்கள் சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட  முபாரக் அலி(29), ஜெகநாதன்(27) மற்றும் சரவணன்(24) என்பதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து  அந்நபர்களை கைது செய்து, அவர்கள் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த ரூ.13,00,000/- மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ‌1,60,000/- ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சூலூர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று களவாடப்பட்ட நகைகளையும், பணத்தையும் பார்வையிட்டார். 

களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு  உந்துகோளாக இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பாராட்டும் விதமாக பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி தங்களது நன்றியை தெரிவித்தனர்.  

வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்து  களவு போன சொத்துக்களை மீட்ட  தனிப்படை காவல்துறையினரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

No comments

Thank you for your comments