டிச.12ல் தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்... அர்ஜூன் சம்பத் அறிவிப்பு
காஞ்சிபுரம்,டிச.9-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வலியுறுத்தி வரும் டிசம்ர் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஹரித்துவாரிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்படிகலிங்கத்துக்கு பொதுமக்களே பாலாபிஷேகம் செய்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு முதல் முதலாக ஸ்டிபகலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாட்டினை தொடக்கி வைத்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது.
இந்துக் கடவுள்களையும்,கோயில்களையும் இழிவாக பேசுவது,சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துவது,தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு செயல்படுவது, பாஜக தலைவர்கள் மற்றும் ஆளுநர்கள் வரும் போது கறுப்புக் கொடி காட்டுவது என பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செய்து வருகிறது.
எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வலியுறுத்தி இம்மாதம் 12 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் மாண்டஸ் புயல் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.மாநில அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும்.
பழனி பாதயாத்திரை, சபரிமலை யாத்திரை செல்வோருக்கு சுங்கவரி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட வேண்டும். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அங்கு தங்கிச் செல்ல இடவசதி செய்து கொடுக்க வேண்டும்.பிற மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் தங்கிச் செல்ல வசதிகள் உள்ளது.அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கடி சபரிமலை செல்லும் ஐயப்பபக்தர்.இவர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபரிமலை செல்வோருக்கு தனியாகவும்,இலவசமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.பேட்டியின் போது கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கே.முத்து,மாவட்ட தலைவர் சரவணன் உட்பட பலரும் உடன் இருந்தனர்.முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.

No comments
Thank you for your comments