Breaking News

மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் திட்டம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ்- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் அமைத்து தரும் திட்டத்தில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.



தமிழ்நாட்டில் பாசனநீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..

ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானித்தில் ஆள்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து  2022-23 ஆம் ஆண்டில் ரூ,12 கோடி செலவில் மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்து தரப்படும் என மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்கள் பேரவையில் அறிவித்தார்கள்,  அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின்  8 மாவட்டங்களில் பாசனநீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு 09.03.2022  அன்று ஆணை பிறப்பித்தது.

அரியலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர்பாதுகாப்பாக உள்ள 249 குறுவட்டங்களில் 200 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 தனிப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசனவசதி அமைத்து கொடுக்க இலக்கு ஒதுக்கீடு பெறப்பட்டு இத்திட்டத்திற்காக இதுவரை விவசாயிகள் கண்டறிந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்ட வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள பயனாளிகள் அருகில் உள்ள உபகோட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அனுகலாம்.

 இத்திட்டத்தின்கீழ் இடத்திற்கு ஏற்றவாறு, குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல்,  நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் இயங்கக் கூடிய பம்புசெட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.

அரசு வெளியிட்ட ஆணையின்படி, 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கும் 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ,3.0 இலட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய   5 குதிரைத்திறன் கொண்ட பம்ப் செட்டுகள் அமைப்பதற்கு ரூ,75 ஆயிரமும், நீர் விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ,20 ஆயிரமும் உச்ச வரம்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புகளுக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ,2.50 இலட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அரசினால் நிர்ணயிக்கப்பட்ட அழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்ப்செட்டுகள் நிறுவவேண்டும் என்றாலோ,  அதற்கான கூடுதல் செலவினை விவசாயிகளே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

 பெரிய விவசாயிகளை போல சிறு மற்றும் குறு ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட சம்மந்தப்பட்ட மாவட்ட வேளான்மை பொறியியல் துறை அலுவலகத்தினை அனுகலாம்.

மேற்கண்ட திட்டங்களின் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெற செயற்பொறியாளர்(வே.பொ,) ,487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம், -631  502, அலைபேசி எண் 044-24352356 கைபேசி எண்  90030 90440. என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments