Breaking News

மாணவி பிரியா மரண வழக்கு.. மருத்துவர்கள் இருவருக்கு முன்ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: 

இளம் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சையளித்த வழக்கில் மருத்துவர்கள் பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் - உஷாராணி தம்பதி மகள் பிரியா (17), சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவருக்குப் பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. 

இதற்காக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்தவமனையில் கடந்த 7-ம் தேதி மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், கால் வலி, வீக்கம் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியாவுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வலது கால் அகற்றப்பட்டது.

 மாநகராட்சி அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன்
 ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...


பெரியார் நகர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்ததால், விசாரணை நடத்த சுகாதாரத் துறை குழு அமைத்தது. இதற்கிடையில், பிரியா கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். 

இதையடுத்து மாணவிக்கு தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மருத்துவர்கள் இருவர் மீதும் பெரவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க கோரி இரண்டு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

அந்த மனுவில், "இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை இதற்குமுன் வெற்றிகரமாக செய்துள்ளோம். தாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலரும் இன்று நல்ல நிலையில் உள்ளனர். மாணவி பிரியா உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளது. எனவே, எங்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். சாட்சிகளை கலைக்க மாட்டோம். மேலும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறோம்" என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர்கள் தரப்பில், "அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகு, வலி இருப்பதாக கூறியிருந்தால் உடனடியாக அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறு தெரிவிக்கவில்லை. மனுதாரர்கள் மீது காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கின் காரணமாக, அவர்களது குடும்ப உறுப்பினர்களை காவல் துறையினர் துன்புறுத்துகின்றனர். எனவே அதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இதுதொடர்பாக விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழுவின் அறிக்கையில், மருத்துவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை தற்போதுதான் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது" என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி, "இந்த வழக்கு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், எந்தவொரு நிவாரணத்தையும் வழங்க முடியாது. வேண்டுமென்றால் மனுதாரர்கள் சரணடைந்து கொள்ளலாம்" என்றார்.. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சரண் அடைவதற்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை. தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர்களின் குடும்பத்தினரை காவல் துறையினர் துன்புறுத்தக்கூடாது என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments