காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
காஞ்சிபுரம், நவ.18-
காஞ்சிபுரம் அருகே சாலபோகம் கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான சொத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டு அந்த இடத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.
காஞ்சிபுரம் அருகே சாலபோகத்தில் அமைந்துள்ளது பழமையான கைலாசநாதர் திருக்கோயில்.இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் காஞ்சிபுரம் அருகே வெள்ளைக்குளம் கிராமத்தில் 42,728 சதுர அடி இடம் இருந்து வந்தது. சம்பந்தப்பட்ட இடத்தினை அனுபவித்து வந்த வாடகைதாரர் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை கொடுக்காமலும் இருந்து வந்தார்.
ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...
இது தொடர்பான வழக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிமன்ற தீர்ப்பின் படி இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் கோட்ட உதவி ஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு முன்னிலையில் கோயில் செயல் அலுவலர்கள் ந.தியாகராஜன், வேதமூர்த்தி மற்றும் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.
இது குறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆ.முத்துரத்தினவேலு கூறுகையில் யுவராஜ் என்பவர் கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான வெள்ளைக்குளம் கிராமத்தில் உள்ள இடத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வந்தார்.
இடத்தின் மொத்த அளவு 98 சென்ட் 42,728 சதுர அடியாகும்.சுமார் ரூ.1.30 கோடி வரை வாடகை பாக்கி இருந்து வந்தது.அந்த இடத்தை மீட்டு, பூட்டி சீல் வைத்து அவரிடமிருந்து சுவாதீனம் பெறுமாறு அரசாணை வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்தினை மீட்டு அதில் யாரும் நுழையக்கூடாது எனவும் எச்சரிக்கை அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.அத்துமீறி இவ்விடத்தில் நுழைந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments