Breaking News

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி ரத்ன அங்கியில் சேவை

காஞ்சிபுரம்,நவ.24

அத்திவரதர் புகழ் காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயிலில் தாதாச்சாரியாரின் சாற்றுமுறை உற்வசவத்தையொட்டி வியாழக்கிழமை உற்சவர் தேவராஜசுவாமி ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


பழமையும்,வரலாற்றுச்சிறப்பும் உடைய காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ராஜகுரு தாத தேசிகன் சாற்று முறை உற்வசம் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருநாள் உள்ளிட்ட இரு நாட்கள் மட்டும் ரத்ன அங்கியில் அலங்காரமாகி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.வியாழக்கிழமை தாததேசிகன் உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமியும், பெருந்தேவித்தாயாரும் ரத்ன அங்கி அணிந்து திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் மங்கள இசை வாத்தியங்களுடன் பவனி வந்து தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினர்.

பெருமாளை ரத்ன அங்கியில் தரிசிப்பதற்காக திரளான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தேசிகன் சந்நிதியில் தரிசனதாம்பூலம் மரியாதை செய்விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.பின்னர் உற்சவர் தேவராஜசுவாமிக்கும்,பெருந்தேவித் தாயாருக்கும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.

மாலையில் உற்சவர் தேவராஜசுவாமி கோயில் சந்நிதி தெருவில் உள்ள திருவடி கோயில் வரை விதீயுலா வந்தார். பின்னர் ஆலயத்தின் நுழைவுவாயிலுக்கு வந்து பெருந்தேவித்தாயாருடன் இணைந்து கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.நிறைவாக பெருமாளும்,தாயாரும் அவரவர் சந்நிதிகளுக்கு எழுந்தருளினர்.


No comments

Thank you for your comments