Breaking News

வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் வட்டி உயருகிறது... ரிசர்வ் வங்கி நடவடிக்கை

புதுடெல்லி : 

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக உயர்த்தி வருகிறது. 


இந்தநிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம், 3-ந் தேதி நடக்கிறது. அதில், மீண்டும் ரெப்போ ரேட் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அதில் வட்டி உயர்வு அறிவிப்பு இடம்பெறாது என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி பிரிவான எஸ்.பி.ஐ. ரிசர்ச் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ ரிசர்ச் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் கூட்டம், வழக்கமான கூட்டமாக இருக்கும். அதில் எந்த முடிவுகளும் அறிவிக்கப்படாது. ஆனால், டிசம்பர் மாத மத்தியில், ரெப்போ ரேட்டை 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம்வரை உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக, 0.5 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த ரெப்போ ரேட் உயர்வால், வாடிக்கையாளர்கள் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?

ஒரு நாட்டின் மத்திய வங்கி அந்நாட்டில் இருக்கும் வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி விகிதம்தான் ரெப்போ வட்டி விகிதம்.

இதுவே வணிக வங்கிகள் மத்திய வங்கிக்கு செலுத்தும் கடனுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 'ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம்' எனப்படுகிறது.

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் பணவீக்கம் கட்டுப்படும் என்பது ஒரு பொருளியல் கோட்பாடு. அதாவது ரெப்போ வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்குவதை இயன்ற அளவுக்குக் குறைக்கும். இதனால் வங்கிகள் வசம் இருக்கும் பணம் குறையும்.

பொது மக்களின் கைகளுக்கு பணம் வருவதற்கான ஆதாரமாக இருக்கும் வங்கிகளிடம் பணம் குறைந்தால், மக்கள் செலவு செய்வதற்கான பணம் அவர்களிடம் அதிகம் இருக்காது. இதனால் நுகோர்வோரான பொது மக்கள் எந்தவொரு பொருளையோ சேவையையோ பெற அதிகம் செலவு செய்ய முன்வர மாட்டார்கள்.

இதனால் அவற்றின் விலை குறைந்து பணவீக்கம் கட்டுப்படும் என்பதுதான் அந்தக் கோட்பாடு.

இதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கிக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டும் என்பதால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டியை உயர்த்தும் என்பதால் அந்த கடன்களை வாங்கியர்வர்களும் கூடுதலான பணத்தை வட்டியாகக் கட்டவேண்டியிருக்கும்.

விலைவாசியைக் குறைக்க எடுக்கப்படும் இந்த நடவடிக்கை பொது மக்களில் ஒரு சாராருக்கு, அதாவது மேற்கண்ட கடன்களை வாங்கியவர்களுக்கு, சுமையைக் கூட்டவும் வல்லது.

நடப்பு 2022-23ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் நான்கு முறை ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

4% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் மே 2022-இல் 4.40 % ஆக உயர்த்தப்பட்டது; பின்னர் ஜூன் மாதம் 4.90% ஆகவும், ஆகஸ்டில் 5.40% ஆகவும், கடைசியாக இந்த செப்டெம்பர் 30-ஆம் தேதி 5.9% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஆறு மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் 1.9% உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்பட்டுள்ளதா என்றால் அதற்கு பதில் ஆம், இல்லை ஆகிய இரண்டும்தான்.

ஏனென்றால், ஏப்ரல் மாதத்தில் 7.79% ஆக இருந்த சில்லறை பணவீக்க விகிதம், மே மாதத்தில் 7.04% ஆகக் குறைந்தது. ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் 7.01% மற்றும் 6.71% ஆகவும் குறைந்தது. பின்னர் ஆகஸ்டில் மீண்டும் 7% ஆக உயர்ந்தது என்று இந்திய அரசின் தரவுகள் காட்டுகின்றன. அதாவது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட காலத்தில், சில மாதங்களில் விலைவாசி குறைந்துள்ளது.

மே முதல் ஜூலை வரை மூன்று மாதங்கள் தொடர்ந்து சில்லறை பணவீக்கம் குறைந்தாலும், இந்தியர்களின் பர்சை பதம் பார்க்கும் விதத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே சில்லறை பணவீக்க விகிதம் ரிசர்வ் வங்கி வைத்துள்ள இலக்கைவிட (4-6%) அதிகமாகவே உள்ளது. சில மாதங்களில் முந்தைய மாதங்களைவிட விலைவாசி குறைந்திருந்தாலும், நாட்டுக்கு உகந்த பணவீக்க விகிதத்தை விட அந்த அளவு அதிகமாகவே இருந்துள்ளது.

இந்தியாவில் சில்லறை பணவீக்க விகிதம் நான்கு சதவிகிதமாக இருக்க வேண்டும்; அந்த அளவில் இருந்து அதிகபட்சமாக 2% மீறலாம், அதாவது 6 % வரை செல்லலாம் என்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. ஆனால், ஜனவரி 2022 முதலே இந்தியாவில் சில்லறை பணவீக்க விகிதம் 6 சதவிகிதத்தைவிட அதிகமாகவே உள்ளது.


No comments

Thank you for your comments