Breaking News

உலகம் சந்திக்கும் சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வு - பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: 
உலகம் சந்திக்கும் பல்வேறு சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15, 16 தேதிகளில் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடந்தது. இந்தியா, சீனா, அமெரிக்கா, கனடா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோ, தென் கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், துருக்கி, சவூதி அரேபியா ஆகிய 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் ஜி-20 கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ளன. இந்தோனேசியாவில் நடந்த உச்சிமாநாட்டில் 2023-ஆம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றது.

இந்நிலையில் இதுகுறித்து தனது மாதாந்திர, மனதின் குரல் (95ஆவது பகுதி) எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜி-20 மாநாட்டில் பங்கெடுக்கும் நாடுகளின் மக்கட்தொகை உலக மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பங்கு, உலக வர்த்தகத்தில் நான்கில் மூன்று பங்கு, உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் உடையவை. நீங்களே கற்பனை செய்து பாருங்கள் – பாரதம் இப்போதிலிருந்து 3 நாட்கள் கழித்து, அதாவது டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி, இத்தனை பெரிய நாடுகள் குழுவிற்கு, இத்தனை வல்லமை வாய்ந்த குழுவிற்குத் தலைமை தாங்க இருக்கிறது. பாரதத்திற்கும், பாரதவாசிகள் ஒவ்வொருவருக்கும் இது எத்தனை பெரிய வாய்ப்பு!! இது மேலும் ஏன் விசேஷமானது என்றால், இந்தப் பொறுப்பு, பாரத நாட்டு சுதந்திரத்தின் அமுதகாலத்தில் கிடைத்திருப்பது தான்.


ஜி-20இன் தலைமை நமக்கெல்லாம் ஒரு பெரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது. நாம் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, உலக நன்மை மீது முழுகவனத்தையும் செலுத்த வேண்டும். அது உலக நன்மையாகட்டும் அல்லது ஒற்றுமையாகட்டும், சுற்றுச்சூழல் தொடர்பான புரிந்துணர்வாகட்டும் அல்லது நீடித்த வளர்ச்சியாகட்டும், பாரதத்திடம் இவற்றோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வு இருக்கிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் கருப்பொருளிலிருந்து, வசுதைவ குடும்பகம் என்பதன் மீதான நம்முடைய அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது.


இனிவரும் நாட்களில், தேசத்தின் பல்வேறு பாகங்களில், ஜி-20 மாநாடு தொடர்பான பல நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட இருக்கின்றன. இதன்படி, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மக்கள் உங்கள் மாநிலங்களுக்கு வரும் சந்தர்ப்பம் ஏற்படும். நீங்கள் உங்கள் பகுதியின் கலாச்சாரத்தின் பல்வகையான, தனித்துவமான வண்ணங்களை உலகின் பார்வைக்கு எடுத்துக் காட்டுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அதே வேளையில், ஜி-20 மாநாட்டிற்கு வருவோர், இன்று என்னவோ ஒரு பிரதிநிதியாக வரலாம் ஆனால், எதிர்காலத்தில் அவரே ஒரு சுற்றுலாப் பயணியாகவும் வரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். உங்களிடம் நான் மேலும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களிடத்தில்; அது என்னவென்றால், ஹரிபிரசாத் காருவைப் போலவே நீங்களும், ஏதோ ஒரு வகையிலே ஜி-20 மாநாட்டோடு கண்டிப்பாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். துணியில் ஜி-20யின் பாரதநாட்டுச் சின்னத்தை மிகவும் நேர்த்தியாக, அழகாக உருவாக்கலாம், அச்சிடலாம். உங்கள் இடங்களில் ஜி-20யோடு தொடர்புடைய விவாதங்கள், உரைகள், போட்டிகள் போன்றவற்றை அரங்கேற்றும் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுங்கள் என்று பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் G20.in என்ற இணைத்தளத்தில் நுழைந்தால், உங்கள் விருப்பத்திற்கேற்ப அங்கே பல விஷயங்கள் கிடைக்கும்.


விண்வெளித்துறை  ஒரு புதிய வரலாறு

எனதருமை நாட்டுமக்களே, நவம்பர் மாதம் 18ஆம் தேதி ஒட்டுமொத்த உலகின் விண்வெளித்துறை ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டதைக் கண்டது. இந்த நாளன்று தான் பாரதம் முதன்முதலாக எப்படிப்பட்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது என்றால், இதன் வடிவமைப்பை பாரதத்தின் தனியார் துறையானது உருவாக்கியிருந்தது. இந்த ராக்கெட்டின் பெயர் விக்ரம்-எஸ். ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்பட்ட உள்நாட்டு விண்வெளி ஸ்டார்ட் அப்பின் இந்த முதல் ராக்கெட், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்ட போது, பாரதநாட்டவர் ஒவ்வொருவரின் சிரமும் பெருமையில் நிமிர்ந்தது.

விக்ரம்-எஸ் ராக்கெட்டின் பல சிறப்பம்சங்கள் உண்டு. பிற ராக்கெட்டுக்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் லகுவானது, விலை குறைவானதும் கூட. இதனை மேம்படுத்துவதற்கான செலவு, விண்வெளிச் செயல்பாட்டோடு தொடர்புடைய பிற நாடுகளுக்கு ஆகும் செலவினத்தை விட மிகவும் குறைவானது தான். குறைந்தபட்ச செலவினம்- உலகத்தரம் வாய்ந்த விண்வெளித் தொழில்நுட்பம் என்பது பாரதத்தின் அடையாளமாக ஆகி விட்டது. இந்த ராக்கெட்டைத் தயாரிக்க, மேலும் ஒரு நவீன தொழில்நுட்பம் பயனாகி இருக்கிறது. இந்த ராக்கெட்டின் சில முக்கியமான பாகங்கள் 3டி பிரிண்டிங், அதாவது முப்பரிமாண அச்சிடுதல் வாயிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். உண்மையில், விக்ரம்-எஸ் உடைய ஏவுதல் இலக்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தொடக்கப் பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இது பாரதத்தில் தனியார் துறை விண்வெளிச் செயல்பாடுகளுக்கான ஒரு புதிய யுக உதயத்தின் அடையாளம். இது தேசத்தின் தன்னம்பிக்கை நிறைந்த ஒரு யுகத்தின் தொடக்கம்.

விண்வெளியை தனியார் துறைக்காகத் திறந்து விட்ட பிறகு, இளைஞர்களின் இந்தக் கனவும் மெய்ப்படத் தொடங்கி இருக்கிறது. ராக்கெட்டை உருவாக்கி வரும் இந்த இளைஞர்கள் என்ன கூறுகிறார்கள் – வானம் எல்லையல்ல, Sky is not the limit!!

பாரதம் விண்வெளித்துறையில் தனது வெற்றியை, தனது அண்டை நாடுகளோடும் பகிர்ந்து கொண்டு வருகிறது. நேற்றுத் தான் பாரதம் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது, இதை பாரதமும் பூட்டான் தேசமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. இந்த செயற்கைக்கோள் மிகவும் சிறப்பான resolution, பிரிதிறன் மிக்க, துல்லியமான படங்களை அனுப்பும்; இது தன்னுடைய இயற்கை ஆதாரங்களை சிறப்பாக நிர்வகிக்க பூட்டான் நாட்டிற்கு உதவிகரமாக இருக்கும். இந்தச் செயற்கைக்கோளின் ஏவுதல், பாரத-பூட்டான் நாடுகளுக்கு இடையேயான பலமான உறவுகளை பிரதிபலிக்கிறது.


இசைக்கருவிகள் ஏற்றுமதி

கடந்த 8 ஆண்டுகளாக பாரதத்திலிருந்து இசைக்கருவிகளின் ஏற்றுமதி, மூணரை மடங்கு அதிகரித்திருக்கிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். மின்னிசைக்கருவிகள் பற்றிப் பேசும் போது இவற்றின் ஏற்றுமதி 60 மடங்கு அதிகரித்திருக்கிறது. பாரதநாட்டுக் கலாச்சாரம் மற்றும் சங்கீதம் மீதான பேரார்வம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது என்பதையே இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்திய இசைக்கருவிகளின் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் தாம். நமது தேசத்தில் இசை, நடனம் மற்றும் கலைகளில் மிகச் செரிவான மரபு இருக்கிறது என்பது நம்மனைவருக்கும் பெரும் பேறு அளிக்கும் விஷயம்.


இசையின் நமது வகைகள், நமது கலாச்சாரத்தை மட்டும் வளப்படுத்தவில்லை, உலகெங்கிலும் இருக்கும் இசையிலும் கூட தங்களுடைய அழிக்கமுடியா முத்திரையை விட்டுச் சென்றிருக்கின்றன. பாரதநாட்டு இசையின் புகழானது, உலகின் மூலை முடுக்கெங்கும் பரவியிருக்கிறது

தசைநார் தேய்வு - Muscular Dystrophy

மருத்துவ அறிவியல் உலகில், ஆய்வுகளும், நூதனமான கண்டுப்பிடிப்புக்களோடு கூடவே, மிக நவீனமான தொழில்நுட்பமும், கருவிகளின் துணையும் மிகவும் முன்னேறியிருக்கிறது என்றாலும், சில நோய்கள், இன்றுவரை மிகப்பெரிய சவாலாகவே விளங்கி வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு நோய் தான் muscular dystrophy, தசைநார் தேய்வு. இது முக்கியமாக ஒரு மரபுவழி பரம்பரை நோய், இது எந்த வயதிலும் தாக்கலாம், இதனால் உடலின் தசைகள் பலவீனப்படத் தொடங்குகின்றன. நோயாளியால் தனது சின்னச்சின்ன அன்றாடச் செயல்களைச் செய்வது கூட சிரமமானதாகிறது. இப்படிப்பட்ட நோயாளிகளின் சிகிச்சையும், பராமரிப்பும் செய்ய, பெரிய சேவை உணர்வு அவசியமாகிறது.


நம் நாட்டிலே ஹிமாச்சல் பிரதேசத்தின் சோலன் பகுதியில் இப்படிப்பட்ட ஒரு மையம் உள்ளது, இது தசைநார் தேய்மானம் உள்ள நோயாளிகளின் வாழ்வில் ஒரு புதிய ஒளிக்கிரணமாக விளங்குகிறது. இந்த மையத்தின் பெயர் மானவ் மந்திர். இதனை Indian Association of Muscular Dystrophy, அதாவது தசைநார் தேய்வுக்கான இந்தியச் சங்கம் நிர்வகித்து வருகிறது. மானவ் மந்திர், தனது பெயருக்கேற்பவே, மனித சேவையின் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. இங்கே நோயாளிகளுக்காக புறநோயாளி மற்றும் சேர்க்கை தொடர்பான சேவைகள் 3-4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டன. மானவ் மந்திரில் சுமார் 50 நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் உண்டு. இயன்முறைமருத்துவம், மின்முறைமருத்துவம், நீர்முறைசிகிச்சை ஆகியவற்றோடு கூடவே, யோகம்-பிராணாயாமத்தின் துணையோடும் இங்கே நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.


அனைத்துவிதமான உயர்தொழில்நுட்ப வசதிகள் வாயிலாக இந்த மையத்தில் நோயாளிகளின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. தசைநார் தேய்வோடு தொடர்புடைய சவால்கள் பற்றிய விழிப்புணர்வும் போதுமானதாக இல்லை. ஆகையால், இந்த மையமானது, ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடெங்கிலும் நோயாளிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே முகாம்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

மானவ் மந்திரை மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் என்ற வகையில் மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இங்கிருக்கும் நோயாளிகளுக்கு மேலும் சிறப்பான சிகிச்சை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்தத் திசையில் முயற்சிகளை மேற்கொண்டுவரும் அனைவருக்கும் என் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; கூடவே தசைநார் தேய்மானத்தை எதிர்கொண்டு வரும் அனைவருக்கும் விரைவில் நலன்கள் ஏற்பட என் நல்விருப்பங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று மனதின் குரலில் நாட்டுமக்களின் ஆக்கப்பூர்வமான, சமூகப் பணிகளைப் பற்றி உரையாடினோம், இவை தேசத்தின் ஆற்றல் மற்றும் உற்சாகத்தின் உதாரணங்கள். நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் இன்று ஏதோ ஒரு துறையில், ஒவ்வொரு நிலையிலும், தேசத்திற்காக வித்தியாசமான ஏதோ ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

நமது குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகளைப் புரிந்து கொண்டுள்ளார்கள், இப்படிப்பட்ட கடமையுணர்வு எந்த ஒரு தேசத்தின் குடிமக்களிடமும் வந்து விட்டது என்று சொன்னால், அந்த தேசத்தின் பொன்னான எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டு விடும், தேசத்தின் பொன்னான எதிர்காலம் என்றால் அது நம்மனைவரின் பொன்னான எதிர்காலம் தானே!!


நான், மீண்டும் ஒருமுறை நாட்டுமக்களுக்கும், அவர்களின் முயல்வுகளுக்கும் தலைவணங்குகிறேன். அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், இப்படிப்பட்ட பல, உற்சாகமளிக்கும் விஷயங்கள் குறித்து கண்டிப்பாக உரையாடுவோம். உங்களுடைய ஆலோசனைகள், கருத்துக்களைக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள். உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்

No comments

Thank you for your comments