தமிழக அரசு பொங்கலுக்கு களிமண் பானைகள் கொள்முதல் செய்யக் கோரிக்கை... மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம்..
காஞ்சிபுரம், நவ.6-
பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தமிழக அரசு களிமண்ணால் செய்யப்பட்ட புதுப்பானையும், புது அடுப்பும் கொள்முதல் செய்து அவற்றை விலையில்லாமல் வழங்கிட வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் நடந்த தமிழக மண்பாண்டத் தொழிலாளர் குலாலர் சங்க கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் குலாலர் சங்க கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள திருநீலகண்ட நாயனார் சத்திரத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் வி.வரதன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஏ.தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணி வரவேற்று பேசினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் சேம.நாராயணன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மண்பாண்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரமும்,களிமண் பாத்திங்கள் செய்யும் ஷீலா மின்சக்கரமும் வழங்கிட வேண்டும்,நவராத்திரி பொம்மைகள் மற்றும் விநாயகர் சிலைகள் செய்யும் போது ஏரி,குளங்களில் இலவசமாக களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும், மாவட்டங்கள் தோறும் களிமண் பேப்பர் பொம்மைகள் தயாரிக்க தொழிற்கூடங்கள் அமைத்து தர வேண்டும்.முக்கியமாக பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் களிமண்ணால் செய்யப்பட்ட புதுப்பானையும்,புது அடுப்பும் அரசு கொள்முதல் செய்து மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்ற சிறப்புத் தீர்மானம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பெரியகாஞ்சிபுரம் குலாலர் சங்க தலைவர் எம்.எஸ்.பூவேந்தன், மாநில இளைஞர் அணித் தலைவர் எஸ்.என்.பழனி,மாநில பொருளாளர் மகேசு கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் கே.நாகப்பன் உட்பட சங்க நிர்வாகிகள், கிளைச்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments