தமிழகத்தில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை.. வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பு தீர்மானம்
காஞ்சிபுரம்,நவ.6-
தமிழகத்தில் காலியாகவுள்ள நீதிபதி மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் புதிய செயலாளர்,பொருளாளர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலர்களாக சேலத்தை சேர்ந்த ஆ.மூர்த்தி,பெரம்பலூரை சேர்ந்த ஆர்.வாசுதேவன் ஆகியோர் செயல்பட்டனர்.
இக்கூட்டத்தில் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவராக நாமக்கல்லை சேர்ந்த எஸ்.கே.வேல்,செயலாளராக காஞ்சிபுரத்தை சேர்ந்த பா.கார்த்திகேயன்,பொருளாளராக அம்பத்தூரை சேர்ந்த க.முரளிபாபு ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர் காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்,தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் நீதிமன்ற எல்லைகள் வரையறை செய்யாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. எனவே பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உடனடியாக உரிய நீதிமன்றங்களை அமைத்து நீதிமன்ற எல்லைகளை வரையறை செய்ய வேண்டும், காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் சங்க துணைத்தலைவர்கள் தா.வித்யாசங்கர், கா.பு.சிவக்குமார், வழக்குரைஞர்கள் அ.முகுந்தன், ர.தினேஷ்குமார் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள்,துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments