Breaking News

காஞ்சிபுரம் கோயில்களில் ரஷ்ய நாட்டினர் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம்,நவ.6-

காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யநாட்டினர் சுவாமி தரிசனம் செய்ததுடன் கோயில்களில் உள்ள சிற்பங்களையும் கண்டு வியந்தனர்.


ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து 20க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் காஞ்சிபுரம் வந்திருந்தனர். இவர்கள் கைலாசநாதர் கோயிலில் தேர் போன்ற வடிவில் உள்ள 58 சுற்றுப்புறக் கோயில்களையும் பார்த்து அவை கல்லால் வடிவமைக்கப்பட்டதா அல்லது மண்ணால் வடிவமைக்கப்பட்டதா என வழிகாட்டியாக வந்தவரிடம் கேட்டு வியந்தனர். பின்னர் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் கலைச்சிற்பங்களையும் புகைப்படம் எடுத்தனர். 


பின்னர் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள கலைச்சிற்பங்களையும் பார்வையிட்டனர். இதனையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த அவர்கள் சுவாமி தரிசனம் செய்ததுடன் கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்தனர். கோயில் ராஜகோபுரம் முன்பாக நின்று அனைவரும் குழுப்புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களின் சிற்பங்கள் மிகவும் வியப்பூட்டுவையாகவும், சிலைகளில் உள்ள எலும்புகள், நரம்புகள் கூட தெரியும் அளவுக்கு அவை செதுக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியாவை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

No comments

Thank you for your comments