Breaking News

காஞ்சிபுரம் ஸ்ரீவிளக்கொளிப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரம், நவ.29

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

தெப்பத்தில் பவனி வந்த விளக்கொளிப் பெருமாள் (உள்படம்) மரகதவல்லித்தாயார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் விளக்கொளிப் பெருமாள்

கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தன்று ஆண்டு தோறும் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டு தெப்பத்திருவிழாவையொட்டி ஆலயத்திலிருந்து உற்சவர் விளக்கொளிப் பெருமாள் ராஜஅலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடனும்,மரகதவல்லித்தாயாருடனும் அருகிலுள்ள வேதாந்த தேசிகர் சந்நிதிக்கு எழுந்தருளினர்.

அங்கு தேசிகருக்கு மரியாதை உற்சவம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து உற்சவர் வேதாந்த தேசிகருடன் பெருமாளும்,தாயாரும் தெப்பத்திற்கு எழுந்தருளி கேடயத்தில் திருக்குளத்தை வலம் வந்தனர்.பின்னர் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அமர்ந்து 7 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தெப்பத்திருவிழாவையொட்டி திருக்கோயிலும்,திருக்குளமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.வாண வேடிக்கைளும் நடைபெற்றன. நாதசுவர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் திருக்குளத்தைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.வான்மதி,நிர்வாக அறங்காவலர் ந.தியாகராஜன்,அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் வெள்ளைச்சாமி,ஸ்ரீதரன்,வழக்குரைஞர் வாசுதேவன் உட்பட பக்தர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தெப்பத்தில் வலம் வந்த பிறகு பெருமாள்,தாயார் மற்றும் தேசிகர் உள்ளிட்ட மூவரும் அவரவர் சந்நிதிக்கு எழுந்தருளினர்.


No comments

Thank you for your comments