இ-நாம் திட்டத்தின் கீழ் விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய வியாபாரிகளுக்கு கெடு விதித்த சப் கலெக்டர்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய, வருகின்ற ஒன்றாம் தேதி வரை வியாபாரிகளுக்கு கெடு விதித்த சப் கலெக்டர்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, சுற்றுவட்டார கிராம பகுதி மட்டும் இல்லாமல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த, நெல், மணிலா, எள்ளு, கம்பு, கேழ்வரகு, சோளம், உளுந்து உள்ளிட்ட தானிய விளை பொருட்களை, விற்பனை செய்வதற்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இ-நாம் திட்டத்தின் கீழ், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யக்கூடிய விளைபொருட்களுக்கான, விலை பட்டியலை செல்போன் அல்லது கணினி மூலம் போட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதால், வியாபாரிகள் விலை போட மறுத்து வந்த நிலையில், தேதி குறிப்பிடாமல், ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டது.
இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். மேலும் வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே விவசாயிகள் கடுமையாக பாதித்து வந்த நிலையில், இன்று சார் ஆட்சியர் பழனி தலைமையில், வியாபாரிகள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சு வார்த்தையில் வருகின்ற டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரை, வழக்கம்போல் மறைமுக ஏல முறையில், விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்து கொள்ளுங்கள் எனவும், டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு மேல், இ- நாம் திட்டத்தின் மூலம், விளைபொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என சார் ஆட்சியர் பழனி கூறியதால், அதற்கு ஒத்துழைப்பு தருவதாக வியாபாரிகள் கூறியதால், பேச்சு வார்த்தை சமூகமாக முடிந்தது.
இதனால் கடந்த 10 நாட்களாக, விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டு இருந்த நிலையில், நாளை முதல் திறக்கப்படும் உள்ளது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வரலாம் என அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


No comments
Thank you for your comments